வி.கைகாட்டியில் சாலை பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை பொதுமக்கள் முற்றுகை


வி.கைகாட்டியில் சாலை பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 20 Dec 2020 4:27 AM IST (Updated: 20 Dec 2020 4:27 AM IST)
t-max-icont-min-icon

வி.கைகாட்டியில் சாலை பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

வி.கைகாட்டி, 

அரியலூர் மாவட்டத்தில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி கல்லகம் கேட் முதல் மீன்சுருட்டி வரை ரூ.900 கோடி மதிப்பீட்டில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலை ஓரங்களில் உள்ள புளியமரங்கள் மற்றும் பனைமரங்கள் வெட்டப்பட்டும், வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டும் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது வி.கைகாட்டி நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் அணுகுசாலை அமைத்து மேம்பாலத்திற்கு கான்கிரீட் போடுவதற்கு சுமார் 9 அடி ஆழத்திற்கு 500 மீட்டர் தூரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் மேம்பாலத்தின் உள்ளே வாகனங்கள் சென்று வெளியே வரும்போது திருச்சி-சிதம்பரம் சாலையில் இருபுறமும் வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்து ஏற்படும் விதமாக சாலை பணி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிள்- கார் மோதி விபத்துக்குள்ளானது.

முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று சாலை அமைக்கும் பணி நடக்கும் இடத்திற்கு சென்று தொழிலாளர்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதனை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story