தெரு வியாபாரிகளுக்கான கடனுதவி முகாமில் பிரதமர் படத்தை பா.ஜ.க.வினர் விளம்பர பேனரில் ஒட்டியதால் பரபரப்பு


தெரு வியாபாரிகளுக்கான கடனுதவி முகாமில் பிரதமர் படத்தை பா.ஜ.க.வினர் விளம்பர பேனரில் ஒட்டியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Dec 2020 8:04 AM IST (Updated: 20 Dec 2020 8:04 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் நடந்த தெரு வியாபாரிகளுக்கான கடனுதவி முகாமில் பிரதமர் படத்தை பா.ஜ.க.வினர் விளம்பர பேனரில் ஒட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது

மயிலாடுதுறை, 

மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நகராட்சி சார்பில் பிரதம மந்திரியின் தெரு வியாபாரிகளுக்கு சுயசார்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் அளவில் கடனுதவி வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு நகராட்சி ஆணையர் சுப்பையன் தலைமை தாங்கினார். அனைத்து தேசிய வங்கிகளில் மேலாளர்கள் முன்னிலை வகித்தனர். இந்த முகாமின் மேடை விளம்பர பேனரில் பிரதம மந்திரியின் தெரு வியாபாரிகள் சுயசார்பு நிதி கடன் உதவி வழங்கும் திட்டம் என இடம் பெற்றிருந்தது.

இந்த முகாமிற்குள் திடீரென நுழைந்த பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன், நகர தலைவர் மோடி கண்ணன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் பிரதமர் மோடியின் படம் இடம் பெறாமல் எப்படி கடன் முகாம் நடத்தலாம்? என நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்த மோடி படத்தினை மேடையில் இருந்த விளம்பர பேனரில் ஒட்டிவிட்டு வெளியேறினர். இதனால் அந்த முகாமில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சகஜ நிலைக்கு திரும்பிய கடன் உதவி முகாமில் ஏற்கனவே இணையதளத்தில் விண்ணப்பித்திருந்த பயனாளிகளிடம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சாலையோர வியாபாரி அடையாள அட்டை நகல்கள் பெறப்பட்டன.

இந்த முகாமில் 450 தெரு வியாபாரிகள் பங்கேற்று கடன் உதவி பெறுவதற்கான தங்கள் ஆவணங்களை அளித்தனர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர்கள் நேதாஜிமோகன், ரவிச்சந்திரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் செய்திருந்தனர்.

Next Story