வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு; அரவையை தொடங்கி வைத்து கலெக்டர் பேட்டி
அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டு 2 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
அரவை தொடக்க விழா
திருவலத்தை அடுத்த அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவை தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் குப்பத்தாமோட்டூர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குனர் (பொறுப்பு) சங்கர், துணைத் தலைவர் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கரும்பு அரவையை துவக்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டு 2 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செஞ்சிலுவை சங்கம்
வேலூர் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தில் உள்ள நிர்வாகப் பிரச்சினைகள் விரைவில் களையப்படும். வேலூர் மாவட்டத்தில் விவசாய பயிர் மட்டுமல்லாது, பாலங்கள், சாலைகள், உள்ளிட்ட கட்டுமானங்களும் நிவர் புயல் மழையால் சேதமடைந்துள்ளது. இம்மாவட்டத்தில் சுமார் ரூ. 250 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக அரசுக்கு மதிப்பீடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏரி, ஆறு, உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டிராக்டர் ஓட்டினார்
பின்னர் ரூ.2.25 லட்சம் அரசு மானியத்தொகையில் ஆலையின் மூலம் கரும்பு விவசாயிக்கு டிராக்டரை கலெக்டர் வழங்கினார். அப்போது டிராக்டரில் அமர்ந்து, அவரே டிராக்டரை சிறிது தூரம் ஓட்டிக் காட்டினார்.
ஆலை அரவை நிகழ்ச்சியில், வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் முகமது ஜான் எம்.பி., அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் சுபாஷ், சோமநாதபுரம் சின்னதுரை மற்றும் ஆலையின் இயக்குனர்கள், விவசாய சங்கத் தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள், விவசாயிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story