இணையதள சேவையில் கோளாறு: ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் தாமதம்; பொதுமக்கள் சாலை மறியல்


இணையதள சேவையில் கோளாறு: ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் தாமதம்; பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 Dec 2020 7:55 AM IST (Updated: 24 Dec 2020 7:55 AM IST)
t-max-icont-min-icon

இணையதள சேவையில் கோளாறு காரணமாக ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள உத்தமசோழபுரம் ஊராட்சியில் நரிமணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உட்பட்ட ரேஷன் கடை உள்ளது.

இந்த கடையில் உத்தமசோழபுரம், பூதங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 498 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக ரேஷன் கடையில் இணையதள சேவையில் கோளாறு ஏற்பட்டு கைரேகை பதிவு செய்யும் எந்திரம் செயல்படவில்லை. இதனால் ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று அந்த பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது இணையதள சேவையில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்து ரேஷன் பொருட்கள் தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக நாகூர்-கங்களாஞ்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story