நாகர்கோவிலில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


நாகர்கோவிலில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Dec 2020 8:33 AM IST (Updated: 24 Dec 2020 8:33 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தில் தேவி முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டிவிட்டுச் சென்றார். ஆனால் நேற்று காலை கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே ஊர் தலைவர் விஜயகுமாருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கோட்டார் போலீசாரும், ஊர் தலைவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இரவில் யாரோ மர்ம நபர் உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த கோவிலில் ஏற்கனவே கொள்ளை சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு கோவில்

இதேபோல் வடலிவிளை முத்தாரம்மன் கோவிலிலும் கொள்ளை நடந்துள்ளது. அதாவது அங்கும் உண்டியலை உடைத்து சுமார் ரூ.15 ஆயிரத்தை மர்ம நபா் அள்ளிச் சென்றுள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அதில் ஒரு மர்ம நபர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த காட்சி பதிவாகி இருந்தது. ெகாள்ளையன் தனது முகத்தை துணியால் மூடியிருந்தார். அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story