குறிஞ்சிப்பாடி அருகே சோகம்: 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று தாய் தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை


குறிஞ்சிப்பாடி அருகே சோகம்: 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று தாய் தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 24 Dec 2020 8:57 PM IST (Updated: 24 Dec 2020 8:57 PM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடி அருகே 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குறிஞ்சிப்பாடி,

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா வெங்கடாம்பேட்டை அடுத்த வேகாக்கொல்லை பிள்ளைபாளையம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 34). பொக்லைன் எந்திர டிரைவர். இவரது மனைவி சுதா (வயது 30). இவர்களுக்கு திலோக்நாத் (4) என்கிற மகனும், ஐஸ்வர்யா (3) என்கிற மகளும் இருந்தனர்.

கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. நேற்று மதியம் தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுதா மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

சிறிது நேரத்துக்கு பின்னர் சுதாவின் மாமனார் சண்முகம் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு அவரது பேரக்குழந்தைகள் இருவரும் பிணமாக கிடந்தனர். மேலும் மருகள் சுதா தனது சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வடலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நெய்வேலி உதவி போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா, வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சுதா தனது 2 குழந்தைகளையும் தனது ஜாக்கெட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்து, பின்னர் தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சுதாவின் கணவர் அய்யப்பன் நேற்று வீட்டில் இல்லை. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒடப்பன்குப்பத்தை சேர்ந்த சுதாவின் தந்தை சுப்பிரமணியன் போலீசில் அளித்த புகாரில், தனது பேரக்குழந்தைகள் மற்றும் மகளின் உடலில் காயங்கள் உள்ளது. எனவே அவர்களது சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சுதாவை வரதட்சணை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், கடந்த வாரம் அவர் வீட்டுக்கு வந்து 3 பவுன் நகையை வாங்கி சென்றார். இந்த நிலையில் மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு தனது குழந்தைகளுடன் சுதா உயிரிழந்துள்ளார். எனவே இவர்களது சாவில் மர்மம் இருக்கிறது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் சுப்பிரமணியன் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுதாவின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று வடலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story