வல்லம்பட்டி கண்மாயை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
வல்லம்பட்டி கண்மாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் பனையடிபட்டி ஊராட்சியை சேர்ந்த வல்லம்பட்டி கண்மாய் 500 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த கண்மாயை நம்பி கோட்டைப்பட்டி, மஞ்சள் ஓடைப்பட்டி, ஜெகவீரம்பட்டி, விஜயகரிசல்குளம், கொம்மங்கிபுரம், புள்ளக்கவுண்டன்பட்டி, பனையடிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக கண்மாய் முழுமையாக நிரம்பாததால் மடைகள் தூர்ந்து போய் உள்ளன.
கண்மாயில் தண்ணீர் திறந்து விடப்படும் வலது கால்வாய், இடது கால்வாய், சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. ஆதலால் விவசாய நிலங்கள் தரிசாக மாறிவருகின்றன. ஆதலால் நெல் பாசனத்திற்கு பதில் சில விவசாயிகள் மாற்று விவசாயம் செய்கின்றனர்.
கண்மாய்கள் முழுவதும் கருவேலி மரங்கள் உள்ளிட்ட தேவையற்ற மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. நீர்பிடிப்பு பகுதிகள் மேடாகி விட்டதால் மழை நீரும் தேங்க வழியில்லாமல் உள்ளது.
கண்மாயை சுற்றி கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் கண்மாய்க்கரை வலுவில்லாமல் உள்ளது. தடுப்பணை அருகிலும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கண்மாயை சுற்றி வளர்ந்துள்ள தேவையற்ற மரங்களை முழுமையாக அகற்றவும், கரைகளை பலப்படுத்தி, கண்மாயை தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story