இங்கிலாந்து சென்று வந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா பரிசோதனை; வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்


இங்கிலாந்து சென்று வந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா பரிசோதனை; வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
x
தினத்தந்தி 25 Dec 2020 3:52 AM IST (Updated: 25 Dec 2020 3:52 AM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து சென்று வந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. இந்த வைரசுக்கு ஏராளமானவர்கள் பலியானார்கள். பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டன. குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் தான் இருக்கிறது. இதற்கிடையே ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் விதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பும் குறைய தொடங்கியது.

70 சதவீதம் வேகம்
ஆனால் தற்போது கொரோனா மீது உலக நாடுகளின் கவனம் ஒருமித்து இருக்கும் நிலையில், இங்கிலாந்தில் ஒருவித புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது. இது ஏற்கனவே இருக்கும் கொரோனா வைரசின் மற்றொரு வடிவமாக வெளிப்பட்டு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த புதிய வகை வைரசானது ஏற்கனவே பாதிப்புகளை உருவாக்கி வரும் கொரோனாவை விட 70 சதவீதம் அதிவேகமாக பரவுவதாக கூறப்படுகிறது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிக்கு முதன்முதலில் ஒப்புதல் அளித்த நாடு இங்கிலாந்து ஆகும். அங்கு சுகாதார பணியாளர்கள் மற்றும் முதியவர்கள் என முன்னுரிமைதாரர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் புதிய வகையான தொற்று அங்கு பரவி வருவது உலக நாடுகளை மீண்டும் அச்சமடைய செய்து வந்து கொண்டிருக்கிறது.

இங்கிலாந்து சென்று வந்த...
இதற்கிடையே இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே வழங்கி வந்த தளர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து சென்று வந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி மத்திய, மாநில அரசின் உத்தரவுப்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்து இங்கிலாந்து சென்று வந்தவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் இங்கிலாந்து சென்று வந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் தற்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

11 பேருக்கு பரிசோதனை
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தொழில் மாவட்டமான திருப்பூரில் பல்வேறு தேவைகளுக்காக வெளிநாடு சென்றுவருவோரின் எண்ணிக்கை மிக அதிகம். தொழில்துறையினர் பலரும் பின்னலாடை வர்த்தகம் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு செல்வார்கள். இந்நிலையில் இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த 9-ம் தேதியில் இருந்து இங்கிலாந்து சென்று வந்தவர்களின் விவரங்களை மாவட்ட சுகாதாரத்துறை சேகரித்துள்ளது. இதில் 11 பேர் சென்று வந்தது தெரியவந்துள்ளது.

திருப்பூர் மாநகரில் 4 பேர், குடிமங்கலம் 2, பல்லடம் 3, காங்கேயம் 2 என மொத்தம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 11 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஏற்கனவே கொரோனா பரிசோதனை (ஸ்வாப்) மேற்கொண்டதில் எவ்வித தொற்றும் இல்லை. இந்நிலையில் 2-ம் முறையாக தற்போது மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் யாருக்கேனும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் புனேயில் உள்ள ஆய்வகத்துக்கு அவர்களது சளி மற்றும் ரத்த மாதிரிகள் அனுப்பி பரிசோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனை முடிவுகள் வரும் வரையும், சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கும் வரை வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story