திருச்சுழி தொகுதியில் விவசாயிகள், நாட்டுப்புற கலைஞர்களுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு; விருதுநகர் கிராமசபை கூட்டத்திலும் பங்கேற்றார்
திருச்சுழி தொகுதியில் விவசாயிகள், நாட்டுப்புற கலைஞர்களுடன் கனிமொழி எம்.பி. சந்தித்து பேசினார். விருதுநகர் கிராமசபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
சேதமடைந்த பயிர்
திருச்சுழி தொகுதி, அழகியநல்லூர் கிராமத்தில் விவசாயிகள், பெண்களுடனும்,, கல்குறிச்சி கிராமத்தில் வாக்குச்சாவடி முகவர்களுடனும், காரியாபட்டியில் நாட்டுப்புற கலைஞர்களுடனும், திருச்சுழி தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
இதில் அழகிய நல்லூர் கிராமத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
திருச்சுழி தொகுதியில் உள்ள மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். தற்போது பேசிய பெண் விவசாயி ஒருவர், தங்களது பகுதியில் காட்டு பன்றிகள் அதிகமாக சுற்றித்திரிந்து விவசாயத்தை முற்றிலும் அளிப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த பகுதியில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
உழவர் சந்தை திட்டம்
தி.மு.க. ஆட்சியில் திருமண நிதி உதவி திட்டம், கியாஸ் அடுப்பு வழங்கும் திட்டம், சுய உதவிக் குழுக்கள், உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு போன்ற எண்ணற்ற திட்டங்கள் பெண்களுக்காக தொலைநோக்கோடு கொண்டுவரப்பட்டன.
அ.தி.மு.க. ஆட்சியில் எந்த வித திட்டங்களும் பெண்களுக்கு என்று செய்யப்படவில்லை. பெண்களுக்கு அடிப்படை பாதுகாப்பு கூட அ.தி.மு.க. ஆட்சியில் இல்லை. தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட உழவர் சந்தை திட்டம் கிராம மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. எங்குமே செயல்படுத்தப்படவில்லை. தற்போது மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்து விவசாயிகளை ஒடுக்க நினைக்கிறது. இந்த வேளாண் திட்டங்கள் மூலம் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். வேளாண் சட்டங்களை தி.மு.க. முற்றிலும் எதிர்த்து வருகிறது.
இசைக்கல்லூரி
தி.மு.க. ஆட்சி வந்ததும், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு என்று இசைக்கல்லூரி போன்ற எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு, ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், காரியாபட்டி நகர செயலாளர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, குரண்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி, மாவட்ட பிரதிநிதி தங்கப்பாண்டியன், மாவட்டஇளைஞரணிதுணை அமைப்பாளர்கள் சிதம்பரபாரதி, சேகர், மாவட்ட மகளிரணி செயலாளர் சரஸ்வதி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்கள் செல்வி, ராஜேஸ்வரி, லதா, தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் பாண்டீஸ்வரி, முத்துமாரி, ஆவுடையம்மாள், கலாவதி, ஜெயராணி, வகிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சரக்கு சேவை வரி விதிப்பு
விருதுநகரில் வியாபாரிகள் மத்தியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சரக்கு சேவை வரி விதிப்பில் உள்ள குழப்பத்தை நீக்க தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனைக்குட்டம் அணையில் ஷட்டர் பழுது நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ரேஷன் கடைகள் மூலம் தரமான அரிசி வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
கிராம சபை கூட்டம்
விருதுநகரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கிராம பகுதிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாத நிலை நீடிக்கிறது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ..ஆர்.ஆர். சீனிவாசன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story