மத்திய அரசின் மகளிர் சக்தி விருது விண்ணப்பிக்க அடுத்த மாதம் 7-ந்தேதி கடைசி நாள்


மத்திய அரசின் மகளிர் சக்தி விருது விண்ணப்பிக்க அடுத்த மாதம் 7-ந்தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 25 Dec 2020 11:32 AM IST (Updated: 25 Dec 2020 11:32 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் மகளிர் சக்தி விருது பெற தகுதியுள்ளவர்கள் அடுத்த மாதம் (ஜனவரி) 7-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கடலூர்,

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் மகளிர் சக்தி விருது அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மகளிருக்கான தனித்துவமான சேவை குறிப்பாக பின்தங்கிய மற்றும் பாதிப்படைந்துள்ள பெண்களுக்கான சேவை புரிபவர்களை அங்கீகரிக்கும் விதமாக மகளிர் சக்தி விருது என்னும் மகளிருக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது.

மகளிருக்கான சுகாதாரம் ஆற்றுப்படுத்தல், சட்ட உதவி, விழிப்புணர்வு கல்வி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் குறிப்பிட்ட பங்களிப்பு, பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள், வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாகுபாடு, துன்புறுத்துதல், பெண் குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் போன்றவற்றில் தலைசிறந்த பங்களிப்பு, சேவை புரிந்து பெண்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் மகளிர் சக்தி விருது வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க வேண்டும்

தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு ரூ.1 லட்சம், நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. வழிகாட்டு நெறிமுறைகளை www.narishaktipuraskar.wcd.gov.in என்னும் இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனத்தினர் விருதுக்கான விண்ணப்பங்களை இணைய தளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய தளம் வழியாக சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் (ஜனவரி) 7-ந்தேதி ஆகும். இறுதி நாளுக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேற்கண்ட தகவலை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story