ராமேசுவரத்தில் இருந்து செல்லும் விசைப்படகு மீனவர்கள் எல்லை தாண்டி செல்லக்கூடாது; சங்க கூட்டத்தில் முடிவு


ராமேசுவரத்தில் இருந்து செல்லும் விசைப்படகு மீனவர்கள் எல்லை தாண்டி செல்லக்கூடாது; சங்க கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 26 Dec 2020 3:12 AM IST (Updated: 26 Dec 2020 3:12 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் இருந்து செல்லும் விசைப்படகு மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன் பிடிக்கக்கூடாது என சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சங்க கூட்டம்
ராமேசுவரத்தில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மீனவர் சங்க தலைவர் என்.ஜே. போஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் சேசுராஜா, ஏமரிட், சகாயம், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் தொண்டி முதல் மண்டபம் வரையிலான கடல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை வைத்து மீன் பிடிக்கும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீன்பிடி படகுகள் மீது மீன்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் மற்றும் காரைக்கால் மீனவர் சங்கமும் அந்த படகுகள் மீது நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும்.

ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்க செல்லும் எந்த ஒரு விசைப்படகும் கண்டிப்பான முறையில் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது. எல்லை தாண்டி மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்படும் படகுகளை மீட்க ராமேசுவரத்தில் உள்ள எந்த ஒரு விசைப்படகு மீனவர் சங்கமும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடாது.

நடவடிக்கை
அதுபோல் ராமேசுவரத்தை சேர்ந்த எந்த ஒரு படகும் அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கக்கூடாது. படகுகளில் அதுபோன்று தடை செய்யப்பட்ட வலைகள் இருந்தால் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

வருகின்ற 30-ந் தேதி மீனவர்கள் பிரச்சினை குறித்து இந்தியா இலங்கை இடையிலான இருதரப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அடுத்த கூட்டம் நடத்தி மீனவர் பிரச்சினை குறித்து முடிவு எடுக்கப்படும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த 40 மீனவர்கள் மற்றும் ஆறு படகையும் விடுதலை செய்து கொண்டு வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று(சனிக்கிழமை) முதல் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்துள்ளனர். அதிலும் பெரிய விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாது எனவும் சிறிய விசைப்படகுகள் மட்டுமே வழக்கம்போல் மீன்பிடிக்க செல்லும் என்றும் கூறப்படுகின்றது.

Next Story