தொடர் விடுமுறை எதிரொலி: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கொடைக்கானல் மோயர் பாயிண்ட் பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
x
கொடைக்கானல் மோயர் பாயிண்ட் பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
தினத்தந்தி 26 Dec 2020 1:28 AM GMT (Updated: 26 Dec 2020 1:28 AM GMT)

தொடர் விடுமுறை எதிரொலியாக கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

போக்குவரத்து நெரிசல்
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை எதிரொலியாக நேற்று அதிகாலை முதலே கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் படையெடுத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார், வேன்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் தனியார் காட்டெஜ்களில் கூட்டம் அலைமோதியது. பலர் அறைகள் கிடைக்காமல் திரும்பி சென்ற சம்பவமும் அரங்கேறியது.

படகு, சைக்கிள் சவாரி
கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, தூண்பாறை, பைன் மரக்காடு, பசுமைப்பள்ளத்தாக்கு, மோயர்பாயிண்ட் உள்பட பல்வேறு இடங்களை பார்த்து ரசித்தனர்.

கொடைக்கானலின் நுழைவு வாயிலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

இதேபோல் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். மேலும் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

மாலையில் கடும் குளிர்
கடந்த சில தினங்களாக கொடைக்கானலில் பகலில் கடும் பனி நிலவி வந்தது. ஆனால் நேற்று சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பகலில் வெப்பம் நிலவியது. மலை முகடுகளை முத்தமிடும் வகையில் வானத்தில் இருந்து அவ்வப்போது தரையிறங்கிய மேக கூட்டங்கள் சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதேவேளையில் மாலை 5 மணிக்கு பிறகு கடும் குளிர் நிலவியது குறிப்பிடத்தக்கது.

Next Story