திருப்பூர், அவினாசி, பொங்கலூரில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


திருப்பூர், அவினாசி, பொங்கலூரில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 26 Dec 2020 1:08 PM GMT (Updated: 26 Dec 2020 1:08 PM GMT)

திருப்பூர், அவினாசி, பொங்கலூர் ஆகிய பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர், 

பெருமாள் கோவில்களில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருப்பூரில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கொரோனா பரவலைத்தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதுபோல் சொர்க்கவாசல் திறக்கும் போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கோவிலுக்குள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வீரராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு வீரராகவ பெருமாளுக்கு திருமஞ்சன மகா அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது கருட வாகனத்தில் வீரராகவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கோவில் வளாகத்தில் இருந்தவர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா' என்று பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் குறிப்பிட்டவர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. பின்னர் ராஜகோபுரம் வழியாக சுவாமி மீண்டும் கோவில் வளாகத்திற்குள் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீரராகவ பெருமாள், கனகவல்லி தாயார், பூதேவி தாயார் நவரத்தின அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதன் பிறகு காலை 7 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் செல்வதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதுபோல் அனைவரின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதுபோல் திருப்பூர் திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் குருவாயூரப்பன் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு குருவாயூரப்பன் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பூர் ராயபுரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்தகோவில் வளாகத்தில் கரிவரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இறையடுத்து நேற்று அதிகாலை 4 மணிக்கு பெருமாள்சாமிக்கு விசேஷ பூஜையும் 5 மணிக்கு உற்சவருக்கு தீபாராதனை உபசாரங்கள் நடைபெற்றது. 5.15 மணிக்கு சொர்க்கவாசலுக்கு பூஜை செய்து பெருமாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையாக கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு சொர்க்கவாசல் பூஜை நடத்தி சொர்க்கவாசல் நடை அடைக்கப்பட்டது.

இதேபோல் கருவலூரில் கருணாகரவெங்கட்டரமன பெருமாள் கோவிலில் நேற்று காலை 4 மணியளவில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

பொங்கலூர் அருகே உள்ள கொடுவாய் ஸ்ரீதேவி, பூதேவி சமேத விண்ணளந்த பெரிய பெருமாள் கோவிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழாவில் சுவாமி கருட வாகனத்தில் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதுபோல் பொங்கலூரையடுத்த அல்லாளபுரம் பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. மேலும் கோவில்வழியில் உள்ள பெரும்பண்ணை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதில் மலர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story