வேளாண் மசோதாவை தெரிந்து கொள்ளாமல் விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன; பா.ஜனதா கூட்டத்தில் துணை தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு


காரைக்குடியில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பேசியபோது எடுத்த படம்
x
காரைக்குடியில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பேசியபோது எடுத்த படம்
தினத்தந்தி 27 Dec 2020 4:14 AM IST (Updated: 27 Dec 2020 4:14 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் மசோதாவை தெரிந்து கொள்ளாமல் விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுகின்றன என்று காரைக்குடியில் நடந்த பா.ஜனதா கூட்டத்தில் துணைத்தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

பா.ஜனதா கூட்டம்
காரைக்குடியில் பா.ஜனதா சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா, வேளாண் மசோதா திட்டம் குறித்த விளக்க கூட்டம், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்த கூட்டம் பாண்டியன் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்களை மாவட்ட தலைவர் செல்வராஜ் வரவேற்றார். பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நயினார்நகேந்திரன், நடிகர் ராதாரவி, பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-

தூண்டி விடுகின்றன
பிரதமர் நரேந்திரமோடி அறிவித்த வேளாண் மசோதா திட்டத்தில் முக்கியமான 3 கருத்துகள் உள்ளது. முதலாவதாக விவசாயி ஒருவர் தான் உற்பத்தி செய்யும் பொருளை யாருக்கு வேண்டுமானாலும், எங்கு கொண்டு சென்றும் விற்பனை செய்யலாம். 2-வதாக விவசாயி ஒருவர் உற்பத்தி செய்யும் பொருளுக்கு அவரே தன்னுடைய பொருளுக்கு விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம். 3-வதாக விவசாயி ஒருவர் தான் உற்பத்தி செய்த பொருளை அந்தாண்டில் விற்பனை செய்யும் போது அவை விலை குறைவாக இருந்தால் அவற்றை போதிய இருப்பு வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு அவை விலை உயர்வு வரும் வரை தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ளலாம். இந்த 3 அற்புதமான சட்டத்தை பற்றி எவ்வித விவரமும் தெரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் உள்ள தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசிற்கு எதிராக விவசாயிகளை தூண்டி போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனர். இதை விரைவில் விவசாயிகள் உணர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு தங்களது அன்றாட பணிக்கு செல்வார்கள்.

போலி விவசாயிகள்
மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் அரசுகள் மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக கருத்துகளை பரப்பி போலி விவசாயிகளை போராட்டத்தில் ஈடுபட வைக்கின்றனர். தமிழகத்தில் பொறுத்தவரை எதிர்க்கட்சி தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் நடிகர் வடிவேல் பாணியில் நானும் விவசாயி தான் என அடிக்கடி கூறி வருவது நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக ஒரு கம்பெனியோ அல்லது ஒரு அரசியல் கட்சியோ 3 தலைமுறைக்கு மேல் இருந்ததாக சரித்திரம் இல்லை. அந்த நிலைமை தான் தி.மு.கவிற்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்
விழாவில் தேவகோட்டை ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் தேவகோட்டை ஒன்றிய தேர்தல் பணிக்குழு தலைவர் அரவிந்த்மகாதேவன், ஒன்றிய பொதுச்செயலாளர் காரை கதிர், ஒன்றிய செயலாளர் சிவா, ஒன்றிய துணைத்தலைவர்கள் பொன்னம்பலம், சுகந்தரநாதன், மாவட்ட பிரசார அணி செயலாளர் கந்தசாமி, மாவட்ட அரசு துறை துணைத்தலைவர் நாகநாதன், ஊரக நகர்புற வளர்ச்சி ஒன்றிய தலைவர் முருகேசன், ஒன்றிய இளைஞரணி தலைவர் ரமேஷ், தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட ஒ.பி.சி அணி செயற்குழு சின்னையா, விவசாய அணி மாவட்ட துணைத்தலைவர் தாமரைக்கண்ணன், ஊரக கிராம வளர்ச்சி ஒன்றிய செயலாளர் இந்திரன், தமிழ் வளர்ச்சி பிரிவு ஒன்றிய தலைவர் ரமேஷ், வர்த்தக அணி ஒன்றிய தலைவர் குமரேசன், ஒன்றிய அமைப்பு செயலாளர் சீனிவாசன், பட்டியல் அணி ஒன்றிய செயலாளர் அசோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story