திருச்சி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 72 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா பரிசோதனை


திருச்சி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 72 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 27 Dec 2020 7:47 AM IST (Updated: 27 Dec 2020 7:47 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 72 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

திருச்சி,

உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்ததன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸ் தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வுக்கூடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதில் இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 470 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களை சேர்ந்த 5, 872 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மொத்தம் இதுவரை 2 லட்சத்து 78 ஆயிரத்து 292 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 9 ஆயிரத்து 96 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, பெரும்பாலானோர் சிகிச்சைக்கு பிறகு படிப்படியாக குணமடைந்துள்ளனர்.

தற்போது இங்கிலாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா அனைத்து நாடுகளையும் மீண்டும் அச்சம் அடைய செய்துள்ளது. புதிய வகை கொரோனா 70 சதவீதம் வேகமாக பரவும் என மருத்துவ நிபுணர்கள் கூறியிருந்தாலும், இந்த வகை கொரோனா அதிக உயிர் இழப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

புதிய வகை கொரோனா

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் துறை டாக்டர் லெட்சுமி கூறுகையில், "தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனை மூலம் ஒருவருக்கு தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பது மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அது புதிய வகை கொரோனாவா? என்பது தெரியாது. புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடல் பிரச்சனைகள் தான் ஏற்படும். ஆனால் புதிய வகை கொரோனா பரவும் வீரியம் அதிகமாக இருக்கும்.

புதிய வகை கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தொடவேண்டும் என்ற அவசியமில்லை. அவர்களிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தாலே மற்றவர்களுக்கும் வேகமாக தொற்று பரவிவிடும். ஆகவே இதற்காக நாம் வேறு எந்த முன்னெச்சரிக்கை மேற்கொள்ளத் தேவையில்லை ஏற்கனவே பொதுமக்கள் கடைப்பிடித்து வந்த முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை தொடர்ந்து மேற்கொள்வது நல்லது" என்றார்.

Next Story