அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து வங்கி அதிகாரி பலி


அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து வங்கி அதிகாரி பலி
x
தினத்தந்தி 28 Dec 2020 3:33 AM IST (Updated: 28 Dec 2020 3:33 AM IST)
t-max-icont-min-icon

அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி பரிதாபமாக இறந்தார்.

வங்கி அதிகாரி
சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (வயது 67). ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி. அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் அவரது மனைவி, மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டில் சூரியபிரகாஷ் மட்டும் தனியாக இருந்தார். அவரது மனைவி, செல்போனில் தொடர்பு கொண்டபோது சூரியபிரகாஷ் எடுக்கவில்லை.

தண்ணீர் தொட்டியில் பிணம்
இதனால் அவரது மனைவி, வீட்டுக்கு வந்து பார்த்தார். அங்கும் கணவர் சூரிய பிரகாசை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுடன் இணைந்து கணவரை தேடினார்.

சந்தேகத்தின்பேரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியை(சம்ப்)திறந்து பார்த்தபோது அதன் உள்ளே சூரியபிரகாஷ் பிணமாக கிடந்ததை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கிண்டி போலீசார், சூரியபிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தவறி விழுந்து...
சூரியபிரகாஷ், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பராமரிப்பு பணியை கவனித்து வந்தார். அவர், தரைமட்ட தண்ணீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்தபோது, தவறி உள்ளே விழுந்து இருக்கலாம். இது தெரியாமல் யாராவது தொட்டியை மூடி இருக்கலாம். இதனால் முதியவரான சூரியபிரகாஷ், நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என கருதப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

இது பற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story