டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் நெல்லையில் ஆலோசனை கோரிக்கை மனுக்களை பெற்றனர்


டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் நெல்லையில் ஆலோசனை கோரிக்கை மனுக்களை பெற்றனர்
x
தினத்தந்தி 29 Dec 2020 8:39 AM IST (Updated: 29 Dec 2020 8:39 AM IST)
t-max-icont-min-icon

டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் நெல்லையில் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

நெல்லை,

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் மாவட்டம் தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து தொகுதி வாரியாக உள்ள கோரிக்கைகள் குறித்தும், பொதுவான திட்டங்கள் குறித்தும் கேட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டத்துக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை கூட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடைபெற்றது. குழு தலைவரும், தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். குழு உறுப்பினர்கள் தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கால்வாய்

இந்த ஆலோசனையில், நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், டாக்டர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது பகுதி குறைபாடுகள், துறை சார்ந்த கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். விவசாயிகள் சார்பில் மானூர் பெரியகுளத்துக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து கால்வாய் அமைக்கும் திட்டம் குறித்து மனு அளிக்கப்பட்டது.

புதிய திட்டங்கள்

பின்னர் பொதுமக்களின் கோரிக்கைகள், புதிய திட்டங்கள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது தலைவர்கள் பேசுகையில், ‘‘தமிழகம் 10 ஆண்டுகளாக அனைத்து துறைகளிலும் பின்னடைவை சந்தித்து உள்ளது. எனவே, தமிழகத்தை மீட்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் காணவும் தி.மு.க.வால்தான் முடியும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் வந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், நிறைவேற்றப்படும் திட்டங்களையே வாக்குறுதியாக, தேர்தல் அறிக்கையாக தருவோம் என்று மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்’’ என கூறியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன் (நெல்லை கிழக்கு), அப்துல் வகாப் (மத்திய மாவட்டம்), சிவபத்மநாதன் (தென்காசி தெற்கு), மாவட்ட பொறுப்பாளர் துரை (தென்காசி வடக்கு), எம்.எல்.ஏ.க்கள் மைதீன்கான், பூங்கோதை, லட்சுமணன், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாங்குநேரிதொழில்நுட்ப பூங்கா

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் டி.ஆர்.பாலுவிடம் நாங்குநேரி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியஎட்வின் மனு கொடுத்தார். அந்த மனுவில், நாங்குநேரியில் தொழில்நுட்ப பூங்கா திட்டத்தை விரைவுபடுத்தி செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், வெள்ள நீர்க்கால்வாய் திட்டத்தில் நாங்குநேரி பகுதியில் விடுபட்ட 46 குளங்களை கால்வாய் ஏற்படுத்தி சேர்க்க வேண்டும். புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். நாங்குநேரி ெரயில் நிலையத்தில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன போன்றவற்றை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.

அப்போது, மூலைக்கரைப்பட்டி நகர செயலாளர் முருகையா உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Next Story