துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.41 லட்சம் தங்கம் பறிமுதல்; வாலிபர் கைது; ரூ.6 லட்சம் சிகரெட்டு, டிரோன் கேமராக்களும் சிக்கியது


பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், சிகரெட்டு பாக்கெட்டுகள் மற்றும் டிரோன் கேமராக்களை படத்தில் காணலாம்.
x
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், சிகரெட்டு பாக்கெட்டுகள் மற்றும் டிரோன் கேமராக்களை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 29 Dec 2020 8:00 PM GMT (Updated: 29 Dec 2020 7:32 PM GMT)

துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.41 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தங்கம் கடத்தல்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது மன்னார்குடியை சேர்ந்த புவியரசன் (வயது 25) என்பவர் வந்தார். அவரது உடைமைகளை சோதனை செய்த போது எதுவும் சிக்காததால், அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடமிருந்து, ரூ.30 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

வாலிபரிடம் விசாரணை
அதேபோல், ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில் (52) என்பவரை நிறுத்திசோதனை செய்த போது அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.11 லட்சம் மதிப்புள்ள 220 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மேலும் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த கருப்பசாமி (60), சசிகுமார் (31) ஆகியோர் கடத்தி வந்த ரூ.6 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 4 ‘டிரோன்’ கேமராக்கள், சிகரெட்டுகள் ஆகியவற்றை கைப்பற்றினார்கள்.

ஒரே நாளில் 4 பேரிடம் இருந்து ரூ.41 லட்சத்து 65 ஆயிரம் 820 கிராம் தங்கமும், ரூ.6 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 4 டிரோன் கேமராக்கள், சிகரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக புவியரசனை கைதுசெய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story