நன்னிலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு போலீசார் விசாரணை


நன்னிலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Dec 2020 8:50 AM IST (Updated: 30 Dec 2020 8:50 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஆனைகுப்பம் மில் தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மனைவி செந்தாமரை செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வேலாயுதம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். செந்தாமரை செல்வி தனது மகன்களுடன் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி செந்தாமரை செல்வி தனது மகன்களுடன் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை செந்தாமரை செல்வியின் வீடு திறந்து கிடந்துள்ளது. இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்

15 பவுன் நகைகள் திருட்டு

இதை தொடர்ந்து செந்தாமரை செல்வி வந்து பார்த்த போது வீட்டின் கதவை உடைக்கப்பட்டு அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செந்தாமரை செல்வியின் வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 15 பவுன் நகையை திருடி சென்றது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் ராக்ஸி வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக செந்தாமரை செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story