சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்


சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்
x
தினத்தந்தி 31 Dec 2020 1:44 AM GMT (Updated: 31 Dec 2020 1:44 AM GMT)

திருவாதிரை திருவிழாவையொட்டி சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

திருச்சி,

திருவாதிரை திருவிழாவையொட்டி சிவன்கோவில்களில் நேற்று ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நடராஜருக்கு மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், இளநீர், பால், தயிர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் தொட்டியம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில், லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் நேற்று ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி மேலப்புலிவார்டுரோடு பகுதியில் உள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவசுப்ரமணியசாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜர் நேற்று காலை சிறப்பு அலங்காரத்துடன், சிவகாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்தாண்டு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் திருச்சியில் பல்வேறு கோவில்களில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சாமி வீதிஉலா நடைபெறவில்லை. பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

மண்ணச்சநல்லூர்

மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி கோவில், போஜீஸ்வரர் கோவில், தொட்டியம் அனலாடீஸ்வரர் உடனுறை திரிபுரசுந்தரி கோவில், தா.பேட்டை காசிவிசாலாட்சி சமேத காசிவிசுவநாதர் கோவில், திருவெறும்பூர் திருநெடுங்களநாதர் கோவில் போன்ற பல்வேறு கொவில்களில் திருவாதிரை திருவிழா நேற்று நடராஜரின் நடனத்துடன் ஆனந்த தரிசனம் நடைபெற்றது.

Next Story