தவறான சிகிச்சையால் குழந்தை சாவு? மகளிர்- குழந்தைகள் ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை
தவறான சிகிச்சையால்தான் குழந்தை இறந்ததாக கூறி மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி,
புதுவை வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் எழில் குமார் (வயது 27). மீனவர். இவரது மனைவி வினோதினி. கர்ப்பமாக இருந்த இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் எல்லைப்பிள்ளைசாவடியில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று முன்தினம் மாலை ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை மருத்துவமனை ஊழியர்கள் எழில்குமாரிடமும் காட்டினார்கள்.
குழந்தைக்கு மூச்சு திணறல் இருப்பதாக கூறி குழந்தையை இன்குபேட்டரிலும் வைத்துள்ளனர். இதற்கிடையே தாய்ப்பால் குடித்த குழந்தை இறந்துள்ளது.
டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால்தான் குழந்தை இறந்ததாக கூறி எழில்குமாரின் உறவினர்கள் நேற்று காலை முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் தலைமையில் மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி முரளி அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஊழியர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதைத்தொடர்ந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துவிட்டு குழந்தையின் உடலை வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story