பிள்ளையார்குப்பம் தனியார் ஓட்டலில் குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட வந்த மாணவி கடத்தல்?


பிள்ளையார்குப்பம் தனியார் ஓட்டலில் குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட வந்த மாணவி கடத்தல்?
x
தினத்தந்தி 31 Dec 2020 2:42 AM GMT (Updated: 31 Dec 2020 2:42 AM GMT)

குறும்படத்தில் நடிக்கப் போவதாகவும், மாடலிங் செய்வதில் தனக்கு ஆர்வம் உள்ளதாகவும் பாவனா அடிக்கடி கூறி வந்துள்ளார்.

பாகூர்,

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கிரண்டோடியா (வயது44). இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் பாவனா என்கிற மகேஷ்வரி. இவர் புதுச்சேரியில் உள்ள தனது பெரியம்மா இந்திரா சோமாணி என்பவரது வீட்டில் தங்கி இருந்து தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

குறும்படத்தில் நடிக்கப் போவதாகவும், மாடலிங் செய்வதில் தனக்கு ஆர்வம் உள்ளதாகவும் பாவனா அடிக்கடி கூறி வந்துள்ளார். படிப்பு முடிந்ததும் அதுபற்றி பார்க்கலாம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட பாவனா கடந்த சில ஆண்டுகளாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை ராஜஸ்தானில் இருந்து வந்திருந்த தனது தாய் மற்றும் சகோதரர், சகோதரியுடன் கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து புத்தாண்டு கொண்டாடுவதற்காக தங்கி இருந்தார்.

அங்கு குடும்பத்தினருடன் தங்கியிருந்த பாவனாவை, நேற்று காலை முதல் திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களின் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, ஏட்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிந்து மாணவி பாவனா கோபித்துச் சென்றாரா? அல்லது அவரை யாரும் கடத்திச் சென்றார்களா? என பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Next Story