மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சவாரி தொடக்கம் - ஒருவருக்கு கட்டணம் ரூ.20


மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சவாரி தொடக்கம் - ஒருவருக்கு கட்டணம் ரூ.20
x
தினத்தந்தி 31 Dec 2020 5:27 PM GMT (Updated: 31 Dec 2020 5:27 PM GMT)

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்ய ஒருவருக்கு ரூ.20 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் நீர் நிரம்பி உள்ளது. வைகை ஆற்றில் இருந்து பனையூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து தெப்பக்குளம் நிரப்பப்பட்டு இருக்கிறது. தெப்பக்குளத்தை காண ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர். அதனால் ஏராளமான கடைகளும் அங்கு முளைத்துள்ளன. மாலை நேரத்தில் மதுரை மக்களின் சுற்றுலா தலமாக தெப்பக்குளம் மாறி உள்ளது. இந்த நிலையில் தெப்பக்குளத்தில் படகுசவாரி இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்பினர்.

அதனை நிறைவேற்றும் விதமாக தெப்பக்குளத்தில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தெப்பக்குளத்தை சுற்றி படகில் சவாரி செய்யலாம். அதற்கு ஒருவருக்கு கட்டணமாக ரூ.20 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த படகு சவாரி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் விசாகன் முன்னிலை வகித்தார். மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையாளர் செல்லதுரை வரவேற்றார். அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு, படகு சவாரியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளம் உள்ளது. அதாவது திருமலை நாயக்கர் மகாலுக்கு தேவையான மண் இங்கிருந்து தான் எடுக்கப்பட்டது. அந்த மண் எடுத்த பிறகு இது தெப்பக்குளமாக மாற்றப்பட்டது. அப்போது வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டது. தற்போதும் அதேபோல் வைகை ஆற்றில் இருந்து பனையூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்டுகிறது. பராம்பரிய முறை மீட்டெடுக்கப்பட்டு வைகை ஆற்றில் தண்ணீர் செல்லும் போது எல்லாம் தெப்பக்குளம் நிரம்பி விடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு மணல் எடுக்கும் போது தான் முக்குருணி விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது. அது தற்போது மீனாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.

வைகை ஆற்றில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்தாலும் இந்த நீர் சுத்திகரிக்கப்பட்ட பின் தான் தெப்பக்குளத்தில் நிரப்பப்படுகிறது. தற்போது தெப்பக்குளத்தில் 12 அடி நீர் உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, தெப்பக்குளத்தை சுற்றி படிக்கட்டுகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநகர மக்களின் பொழுது போக்கு இடமாக தெப்பக்குளம் உள்ளது. எனவே இங்கு பொதுமக்களுக்காக படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் செல்லூர் ராஜூ, கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் விசாகன் ஆகியோர் படகு சவாரி செய்தனர். தற்போது தெப்பக்குளத்தில் 2 படகுகள் உள்ளன. ஒரு படகில் 6 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். எனவே கூடுதல் படகுகள் விரைவில் இயக்கப்படும் என்று தெரிகிறது.

Next Story