வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, கார் திருட்டு; சோபாவில் உள்ள பஞ்சால் கைரேகைகளை அழித்து சென்ற கொள்ளையர்கள்
போரூரில், வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை மற்றும் காரை திருடிச்சென்ற கொள்ளையர்கள், சோபாவை கிழித்து அதில் உள்ள பஞ்சில் தண்ணீரில் நனைத்து, அங்கு பதிவான தங்களது கைரேகைகளை அழித்து சென்றனர்.
நகை-கார் திருட்டு
சென்னை போரூர் மதனந்தபுரம், காமாட்சி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன், மதுரையில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுவிட்டார்.
நேற்று காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டும், வீட்டின் பின்னால் நிறுத்தி வைத்திருந்த கார் திருடப்பட்டும் இருப்பதாக அக்கம் பக்கத்தினர் விஜயகுமாருக்கு தகவல் கொடுத்தனர். இதுபற்றி அவர் மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அதில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள் மற்றும் காரை திருடிச்சென்றது தெரிந்தது.
கைரேகைகள் அழிப்பு
மேலும், கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்காமல் இருக்க வீட்டில் இருந்த சோபாவை கிழித்து அதிலிருந்து பஞ்சை எடுத்து தண்ணீரில் நனைத்து அங்கு பதிவாகி இருந்த தங்களது கைரேகைகள் அனைத்தையும் அழித்து சென்றிருப்பதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதுபற்றி மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story