பாகூர் பகுதியில் திடீர் மழை: அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை
பாகூர் பகுதியில் விடிய விடிய பெய்ததால் வயல்களில் மழைநீர் தேங்கி அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன.
பாகூர்,
வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர், புரெவி புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த மாதம் மழை வெளுத்து வாங்கியது. கனமழை முதல் மிக கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் தாழ்வான பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியது. ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வானத்தில் மேகங்கள் திரண்டு வந்து குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து புதுச்சேரி நகரம் மற்றும் பாகூர் உள்ளிட்ட கிராமப்புறங்களில் விடிய விடிய திடீரென மழை பெய்தது.
இதனால் பாகூர், கன்னியகோவில், கிருமாம்பாக்கம், நெட்டப்பாக்கம், சோரியாங்குப்பம், பரிக்கல்பட்டு, கரையாம்புத்தூர், குருவிநத்தம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
வயல்களிலும் தண்ணீர் தேங்கியதால் பல இடங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. பாகூர் பகுதியில் மட்டும் ஒரே நாளில் 4.4 செ.மீ. மழை பதிவானது.
இந்த மழையால் பாகூர், கரையாம்புத்தூர், கரிக்கலாம்பாக்கம், சேலியமேடு, அரங்கனூர், பரிக்கல்பட்டு ஆகிய பகுதிகளில் வயல்களில் மழைநீர் தேங்கி அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
பொதுவாக நெல் அறுவடை செய்யும் போது ஏக்கருக்கு 40 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்ய முடியும். தற்போது பெய்த கனமழை காரணமாக 20 மூட்டைகள் வருவதே சந்தேகம் என விவசாயிகள் வேதனையுடன் கூறி வருகின்றனர்.
Related Tags :
Next Story