திருச்சியில் கொட்டி தீர்த்த கனமழை சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்


திருச்சியில் கொட்டி தீர்த்த கனமழை சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
x
தினத்தந்தி 1 Jan 2021 7:30 AM IST (Updated: 1 Jan 2021 7:30 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக பனிப்பொழிவும், பகலில் வெயிலின் தாக்கமும் இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. மேலும் இரவு முழுவதும் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்தது.

நேற்று காலை முதல் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. காலையில் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருச்சி மாநகரத்துக்குட்பட்ட மத்திய பஸ்நிலையம், சத்திரம் பஸ்நிலையம், கண்டோன்மெண்ட், பீமநகர், காந்திமார்க்கெட், ஸ்ரீரங்கம், பாலக்கரை, தில்லைநகர் உள்பட பல பகுதிகளில் மழைநீர் சாக்கடையில் வடிந்து செல்ல போதுமான வழித்தடம் இல்லாததால் சாலையோரம் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பலத்த மழையின் காரணமாக பல பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக சென்றன. ஒரு சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மரம் சாய்ந்தது

மேலும் இந்த மழையால் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே அரியலூர், பெரம்பலூர் பஸ்கள் நின்று செல்லும் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்த பெரிய மரம் ஒன்று நேற்று திடீரென சாய்ந்து விழுந்தது. எப்போதும் பயணிகள் மற்றும் வாகன நடமாட்டம் உள்ள பகுதியில் மரம் விழுந்தாலும் மழை பெய்ததால், அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் அந்த இடத்தில் இல்லை.

இதேபோல திருச்சி சங்கரன் பிள்ளை ரோட்டில் உள்ள ஒரு மிக பழமை வாய்ந்த மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே திடீரென சாய்ந்து விழுந்தது. இந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.

மழை அளவு

திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-கல்லக்குடி- 17.20, லால்குடி- 24.20, நந்தியாறுதலை- 29.40, புள்ளம்பாடி- 18.40, தேவிமங்கலம்- 15.00, சமயபுரம்- 12.40, வாத்தலைஅணைக்கட்டு- 9.20, மணப்பாறை- 1.40, பொன்னையாறுஅணை 7.40, முசிறி-1.20, புலிவலம்- 7.00, நவலூர்குட்டப்பட்டு- 7.40, துவாக்குடி- 1.00, கொப்பம்பட்டி- 2.00, தென்பரநாடு-2.00, துறையூர்-3.00, பொன்மலை- 9.60, விமானநிலையம்- 5.20, திருச்சி ஜங்‌‌ஷன்- 11.00, திருச்சி டவுன்-16.00. திருச்சி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 200 மில்லிமீட்டரும், சராசரியாக 8.00 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

Next Story