தமிழகத்தில் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி பேச்சு


தமிழகத்தில் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 1 Jan 2021 9:32 AM IST (Updated: 1 Jan 2021 9:32 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று திருவெறும்பூர் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

திருவெறும்பூர்,

தி.மு.க. ஒரு அராஜக கட்சி, ரவுடித்தனம் செய்யும் கட்சி என்பது அத்தனை பேருக்கும் தெரியும். எப்படியாவது இந்த தேர்தலில் தில்லு முல்லு செய்து வெற்றி பெறலாம் என்று வியூகம் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நாம் எவ்வித இடமும் தராமல் எச்சரிக்கையாக பணியாற்ற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் நிறைவேற்ற முடியாத, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆகி இதுவரை தமிழகத்திற்கு என்ன செய்துள்ளீர்கள்? ஒன்றுமே செய்யவில்லை.

தமிழகத்திற்கு இதுவரை கூடுதலாக நிதி ஏதும் பெற்றுத் தந்துள்ளீர்களா?, புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு நடவடிக்கை எடுத்தீர்களா?, ஒன்றுமே செய்யவில்லை. பதவிக்கு வரும் வரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொய் பேசுவார்கள். அதுவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் பேசுவதில் மிக வல்லவர். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு தரவேண்டும் என்று சொன்னால் அது ஸ்டாலினுக்குத் தந்தால் மிகப் பொருத்தமாக இருக்கும். இந்த தேர்தலில் உங்கள் வாக்குகள் மூலம் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும். நல்ல ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

விவசாயிகளின் நலன் காக்க டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நான் அறிவித்துள்ளேன். ஆனால் மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு ஒப்பந்தம் போட்டவர் மு.க.ஸ்டாலின்தான். அதை தடுத்து நிறுத்தியது அ.தி.மு.க. அரசு. செய்தது எல்லாம் அவர்கள், பழியை நம்மீது போடுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரால் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. ஆனால் அந்த மனுக்கள் எங்கே போனது, உரிய அரசு அதிகாரிகளிடம் சேர்த்தார்களா, இல்லையே.

மக்களை ஏமாற்றுவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்பிறகு எல்லோரும் நம்முடன் என்று ஒரு அமைப்பை நடத்தினார்கள். அதில் தி.மு.க.வினர் வாக்காளர் பட்டியலை எடுத்துக் கொண்டு, அவர்களின் விருப்பம் இல்லாமலே எல்லோருடைய பெயரையும் இணையதளத்தில் இணைத்துக்கொண்டார்கள்.

கார்ப்பரேட் கம்பெனி

தி.மு.க.வில் வாரிசு அரசியல் மட்டும் அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி ஆகிவிட்டது. அதை ஒரு கட்சி என்று அழைப்பதைவிட கார்ப்பரேட் கம்பெனி என்று அழைப்பது சரியாக இருக்கும். இப்படிப்பட்ட கம்பெனி தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரலாமா என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

உழைக்கின்றவர்கள் வர வேண்டும், நாட்டு மக்களுக்கு நன்மை செய்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். மக்களாகிய நீங்கள் நீதிபதியாக இருந்து நடுநிலை தவறாமல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தொடர அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற, வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்திற்கே.

மக்களின் எண்ணங்களை அறிந்து, திட்டங்களை தீட்டி செயல்படுத்துகின்ற அ.தி.மு.க. அரசு தொடர நீங்கள் அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களித்து அ.தி.மு.க. வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பங்கேற்றோர்

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் எல்.ஜெயக்குமார் (மணிகண்டம் வடக்கு), எஸ்.பி.முத்துக்குமார் (மணிகண்டம் தெற்கு), கோப்பு அ.நடராஜ் (அந்தநல்லூர் ெதற்கு), கும்பக்குடி டி.கோவிந்தராஜ்(திருவெறும்பூர் மேற்கு), வட்டக்கழக செயலாளர் காட்டூர் எஸ்.ஆர்.ரவி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட ெஜயலலிதா பேரவை செயலாளர் பவுன் டி.டி.கிருஷ்ணன், துவாக்குடி நகர செயலாளர் எஸ்.பி.பாண்டியன், திருநெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதிசதீஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story