திண்டுக்கல் அருகே பரபரப்பு; பூட்டிய அறைக்குள் பெண் போலீஸ் பிணம்; உயிர்த்தெழுவார் என பிரார்த்தனை; பாதிரியாரிடம் விசாரணை


அன்னை இந்திரா; போலீஸ் மோப்பநாய் மூலம் துப்பு துலக்கப்பட்ட காட்சி; இறந்த பெண் போலீசின் உடல்
x
அன்னை இந்திரா; போலீஸ் மோப்பநாய் மூலம் துப்பு துலக்கப்பட்ட காட்சி; இறந்த பெண் போலீசின் உடல்
தினத்தந்தி 1 Jan 2021 4:29 AM GMT (Updated: 1 Jan 2021 4:29 AM GMT)

திண்டுக்கல் அருகே பூட்டிய அறைக்குள் பெண் போலீஸ் பிணமாக கிடந்தார். அவர் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் பிரார்த்தனை நடத்திய அவரது அக்காள் மற்றும் பாதிரியாரிடம் விசாரணை நடக்கிறது.

பெண் போலீஸ்
திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரசரி காலனியில் வசித்து வந்தவர் அன்னை இந்திரா (வயது 38). இவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் பால்ராஜ்(43). இவர்களுக்கு ரட்சகன் (12), மெர்சி (8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இவருடன் அவரது அக்காள் வாசுகி மற்றும் குடும்ப நண்பரான பாதிரியார் சுதர்சனம் ஆகியோர் வசித்து வந்தனர்.

உடல்நிலை பாதிப்பு
அன்னை இந்திராவிற்கு பல வருடங்களாக உடல்நிலை பாதிப்பு இருந்தது. இதனால் இவர் அடிக்கடி விடுமுறை எடுத்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் தன் உடல்நிலையை காரணம் காட்டி விருப்ப ஓய்வுக்காக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவிடம் விண்ணப்பம் அளித்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு, அவரை திண்டுக்கல்லில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்தார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 16-ந் தேதி முதல் அன்னை இந்திரா மருத்துவ விடுப்பு எடுத்தார். இவர் விடுமுறை முடிந்து கடந்த 26-ந்தேதி பணியில் சேர வேண்டும். ஆனால் அவர் பணிக்கு வரவில்லை.

அழுகிய நிலையில் பிணம்
இதனையடுத்து நேற்று காலை 2 பெண் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் உள் அறை கதவு பூட்டப்பட்டு இருந்தது. மேலும் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பெண் போலீசார் உடனடியாக தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இந்திராவின் பிணம் துணியால் மூடப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் துணியை விலக்கி பார்த்தனர். அவரது உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. மேலும் அங்கு கடுமையான துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து, உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் அந்த இடத்திலேயே வைத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அவரது வீட்டு முன்பு வைக்கப்பட்டு இருந்த தகவல் பலகையில் மத பிரசாரம் செய்யும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.

உயிர்த்தெழுவார் என்று பிரார்த்தனை
இதைத்தொடர்ந்து போலீசார் அன்னை இந்திராவின் அக்காள் வாசுகி மற்றும் பாதிரியார் சுதர்சன் ஆகியோரிடம் விசாரணை செய்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அன்னை இந்திரா கடந்த மாதம் 7-ந்தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாகவும் அவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் அதற்காக தினமும் நாங்கள் பிரார்த்தனை செய்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து வாசுகி மற்றும் சுதர்சனை போலீசார் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story