காஞ்சீபுரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு 1,894 மது விலக்கு வழக்குகளில் 1,971 பேர் கைது; போலீஸ் சூப்பிரண்டு தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1894 மது விலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1971 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா தெரிவித்துள்ளார்.
140 வழக்குகள்கண்டுபிடிப்பு
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 174 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 140 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.. களவு போன ரூ.3 கோடியே 78 லட்சத்து 90 ஆயிரத்து 460 மதிப்பிலான சொத்தில் ரூ.3 கோடியே 6 லட்சத்து 81 ஆயிரத்து 790 மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது.
குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுக்கும் பொருட்டு 655 பழைய குற்றவாளிகளின் மீது நன்னடத்தை பிணையம் பெறப்பட்டுள்ளது.
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 64 பேர்
பொது அமைதியை கெடுக்கும் விதமாக செயல்பட்ட 50 ரவுடிகள், ஒரு மணல் திருட்டு குற்றவாளி, போதைப்பொருள் விற்பனை செய்த 7 குற்றவாளிகள், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 நபர்கள், கள்ளச்சாராய குற்றவாளிகள் 2 பேர் என மொத்தம் 64 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொலை குற்றவாளி ஒருவருக்கு கோர்ட்டு விசாரணையை துரிதப்படுத்தி ஆயுள் தண்டனை மற்றும் அபராத தொகை ரூ.48 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கள்ளநோட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 37 ஆண்டுகள் தண்டனையாக பெறப்பட்டது.
மேலும் இந்த மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மதுவிலக்கு தொடர்பாக 1894 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1971 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
62.70 சதவீதமாக குறைவு
மதுவிலக்கு வேட்டையின்போது 34 ஆயிரத்து 780 மது பாட்டில்களும், 1773 லிட்டர் எரிசாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனங்கள் 16, மூன்று சக்கர வாகனங்கள் 4, இரண்டு சக்கர வாகனங்கள் 48 என மொத்தம் 68 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வாகன விபத்தை தடுக்கும் பொருட்டு பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக 2019-ம் ஆண்டை விட கடந்த ஆண்டு வாகன விபத்துகளின் எண்ணிக்கை 62.70 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு 686 வாகன விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 167 நபர்கள் வாகன விபத்தில் இறந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 55.67 சதவீதம் குறைவாகும்.
மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சாலை விதிகளை மீறியதாக ரூ.4 கோடியே 59 லட்சத்து 64 ஆயிரத்து 350 அபராத தொகையாக விதிக்கப்பட்டு அதில் ரூ.1 கோடியே 6 லட்சத்து 78 ஆயிரத்து 500 அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டிய 495 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மோட்டார் வாகன சிறு வழக்குகள் சேர்த்து 2 ஆயிரத்து 205 வாகன ஓட்டிகளிடம் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
14 தணிக்கை சாவடிகள்
பொதுமக்கள் சாலை விதிகளை் தெரிந்து கொள்ளும் பொருட்டு காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் 17 ஆயிரத்து 940 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் 1345 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட தலைமை இடத்தில் ஒருங்கிணைந்த கண்காணிப்பபு கேமரா காவல் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 14 தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு வெளிமாவட்ட குற்றவாளிகள் யாரும் இந்த மாவட்டத்தில் நுழையா வண்ணம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவாமல் இருக்க
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கொரோனா தொற்றுநோய் பொதுமக்களிடம் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக 18 ஆயிரத்து 358 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 ஆயிரத்து 113 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் விடுவிக்கப்பட்டது.
மேலும் முக கவசம் அணியாதவர்கள் மீது 1226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு காணாமல் போன 324 நபர்கள் சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டதில் 277 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
விழிப்புணர்வு முகாம்கள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக 112 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குழந்தைகளுக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபட்ட 40 நபர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க வேண்டி 83 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சட்டம் ஒழுங்கு, குற்றத்தடுப்பு, மதுவிலக்கு மற்றும் போக்குவரத்து பிரிவுகளில் காஞ்சீிபுரம் மாவட்ட காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story