காஞ்சீபுரத்தில் கோவில் செயல் அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 4 பேர் மீது வழக்கு


காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில்
x
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில்
தினத்தந்தி 3 Jan 2021 5:42 AM IST (Updated: 3 Jan 2021 5:42 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது வடகலை பிரிவினருக்கும், தென்கலை பிரிவினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதையறிந்த காஞ்சீபுரம் ஆர்.டி.ஓ. வித்யா, தாசில்தார் பவானி, துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை மற்றும் போலீசார் கோவிலுக்கு சென்று மோதலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோவில் வளாகத்திற்குள் பதற்றம் நிலவியதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

பேச்சுவார்த்தையின் முடிவில் கோவில் செயல் அலுவலரான தியாகராஜன் இரு தரப்பினருமே வேதபாராயணம் பாட வேண்டாம். கோவிலில் நடைபெறும் திருவிழாவின் போது தீபாராதனை மட்டுமே சாமிக்கு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

மோதல் குறித்து கோவில் செயல் அலுவலரான தியாகராஜன் விஷ்ணு காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் வரதராஜ் பெருமாள் கோவிில் விழாவின் போது எனது பணியை செய்ய விடாமல் வடகலை பிரிவை சேர்ந்த வாசுதேவன், ரங்கராஜன், சீனிவாசன், மாலோணன் ஆகியோர் தடுத்தனர். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததால் அவர்கள் 4 பேர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் விஷ்ணுகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story