2½ கோடி மருந்துகளை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு: முன்களப்பணியாளர்கள் 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி அமைச்சர் பேட்டி


2½ கோடி மருந்துகளை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு: முன்களப்பணியாளர்கள் 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 4 Jan 2021 4:38 AM IST (Updated: 4 Jan 2021 4:38 AM IST)
t-max-icont-min-icon

2½ கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 6 லட்சம் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை,

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கிள்ளுக்கோட்டையில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

மத்திய அரசு 2 வகையான கொரோனா தடுப்பு மருந்திற்கு அனுமதி வழங்கியது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. கோவி ஷீல்டு, கோவேக்சின் தடுப்பு மருந்து பல்வேறு பரிசோதனை முயற்சிகளை கடந்து தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்தபடி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் ஒரே நேரத்தில் தமிழகத்திற்கு எத்தனை கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டாலும் உரிய நெறிமுறைகளின்படி வழங்க அரசு தயார் நிலையில் உள்ளது.

6 லட்சம் முன்களப்பணியாளர்கள்

தமிழகத்தில் முதற்கட்டமாக டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் என 6 லட்சம் முன்களப்பணியாளர்கள் கணக்கெடுக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தடுப்பு மருந்து வழங்கப்படும் வரை பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பு மருந்து வரக் கூடிய இந்த சூழ்நிலையில் கொரோனா தொற்று பரவாமல் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக வர அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதேபோன்று ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தமிழக அரசிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

கட்டமைப்பு வசதி

கொரோனா தடுப்பு மருந்து ஒப்புதல் பெறப்பட்டு, உற்பத்தியாகி தொடர்ச்சியாக வரும் பொழுது தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதற்கட்டமாக 2½ கோடி எண்ணிக்கையில் தடுப்பு மருந்துகள் பெறப்பட்டு, பாதுகாப்பாக வைக்கும் வகையில் தமிழக அரசு போதிய கட்டமைப்பு வசதிகளுடன் தயார்நிலையில் உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து முன்களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு படிப்படியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story