திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் கிணற்றில் தவறி விழுந்து சாவு போலீசார் விசாரணை


திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் கிணற்றில் தவறி விழுந்து சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Jan 2021 6:56 AM IST (Updated: 4 Jan 2021 6:56 AM IST)
t-max-icont-min-icon

கச்சிராயப்பாளையம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள சடையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து என்கிற துரைமுத்து. விவசாயி. இவரது மகள் நிலா என்கிற சர்மிளா(வயது 24). எம்.எஸ்சி. பட்டதாரியான இவர் வீட்டு வேலைகளை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று சர்மிளா பசுமாட்டை மேய்ச்சலுக்காக அவரது நிலத்துக்கு ஓட்டிச்சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சர்மிளாவை தேடி நிலத்துக்கு சென்றனர்.

பிணமாக மிதந்தார்

அப்போது பசுமாடுமட்டும் மேய்ந்து கொண்டிருந்தது. சர்மிளாவை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்குள்ள கிணற்றில் பார்த்தபோது. அங்கே சர்மிளா பிணமாக மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறி அழுதனர். இது பற்றிய தகவல் அறிந்து கிராமமக்கள் அங்கே திரண்டனர்.

பின்னர் இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்களும், கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வினோத்குமார், நரசிம்மஜோதி மற்றும் போலீசார் அங்கே விரைந்து வந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சர்மிளாவின் உடலை மீட்டனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கிணற்றில் தவறி விழுந்தார்

தற்கொலை செய்து கொண்ட சர்மிளாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சம் செய்துள்ளனர். திருமணத்துக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் அவர் பசுமாட்டை மேய்ச்சலுக்காக விவசாய நிலத்தில் அழைத்து சென்றபோது அவர் தவறி கிணற்றில் விழுந்து மூழ்கி பலியானதாக கூறப்படுகிறது. இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவத்தால் சடையம்பட்டு கிராமமக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

Next Story