விவசாயிகளை ரவுடிகளுடன் ஒப்பிட்டு பேசுவதா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்


விவசாயிகளை ரவுடிகளுடன் ஒப்பிட்டு பேசுவதா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
x
தினத்தந்தி 4 Jan 2021 8:46 AM IST (Updated: 4 Jan 2021 8:46 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளை ரவுடிகளுடன் ஒப்பிட்டு பேசுவதா? என மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தில் பருத்தி, எலுமிச்சை, மக்காச்சோளம், சிறுதானிய விவசாயிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது:-

விவசாயி என்றாலே உழைப்பாளி. நமக்கு எல்லாம் உணவு கொடுப்பவன். விவசாயி மட்டுமே யாரையும் எதிர்பார்க்காமல் சொந்த காலில் நிற்பவர்கள். விவசாயிகளுக்கு என்ன பிரச்சினை உள்ளது என்பதை தமிழக அரசு உணர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயத்திற்கு முக்கியமானது நீர் ஆகும். தண்ணீர் இருந்தால் தான் விவசாயம் செழிப்பாக இருக்கும். அதனால் தான் தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இதனால் வறட்சி காலத்திலும் நிலத்தடி நீர் குறையாமல் விவசாயம் பாதுகாக்கப்படுகிறது. குடிமராமத்து திட்டத்தை அனைத்து தரப்பினரும் வரவேற்கிறார்கள்.

ரூ.9,400 கோடி இழப்பீட்டு தொகை

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பயிர் காப்பீட்டு திட்டத்தில் அதிக இழப்பீட்டு தொகை பெற்று தரப்பட்டு உள்ளது. ரூ.9,400 கோடி பெற்று தந்துள்ளோம். விவசாயிகள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு அ.தி.மு.க. அரசு பாதுகாப்பு அரணாக இருந்து உதவி செய்கிறது.

கோவில்பட்டி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மக்காச்சோளப்பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் காணப்பட்டது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் அவதிப்பட்டனர். உடனடியாக ரூ.45 கோடியில் அரசு செலவிலேயே அந்த பகுதியில் மருந்து தெளித்து படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு அமோக விளைச்சலால் லாபம் ஏற்பட்டது.

குளிர்ப்பதன கிடங்கு

தமிழகத்தில் அரசு சார்பில் மாவட்டம் தோறும் தலா ரூ.20 கோடி செலவில் குளிர்ப்பதன கிடங்கு உருவாக்கப்பட உள்ளது. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இங்கு சென்று விற்பனை செய்து கொள்ளலாம். விற்காத பொருட்களை அங்குள்ள குளிர்ப்பதன கிடங்கில் சேமித்து வைக்கலாம். இப்படி விவசாயிகளின் பாதுகாவலனாக தமிழக அரசு இருந்து வருகிறது.

மேலும் கோவில்பட்டியில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு சிலை திறந்து வைக்கப்பட்டு உள்ளது. அவர் பிறந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி அரசு விழாவாக கொண்டாட அறிவித்து உள்ளேன். இதுதவிர ஜனவரி 25-ந் தேதி அதிக நெல் மகசூல் செய்த விவசாயிகளுக்கு நாராயணசாமி நாயுடு பெயரில் விருது வழங்க இருக்கிறோம். திருமலைநாயக்கர் பிறந்த நாளையும் அரசு விழாவாக அறிவித்து உள்ளோம்.

மு.க.ஸ்டாலின் மீது தாக்கு

ரவுடி ஒருவன் நானும் ரவுடி தான் என்று சொல்லிக்கொள்வான், அதுபோல் எடப்பாடி பழனிசாமி விவசாயி விவசாயி என்று சொல்லி பெருமைப்படுவதாக மு.க.ஸ்டாலின் குறை கூறி வருகிறார். மு.க.ஸ்டாலின் விவசாயிகளை ரவுடியுடன் ஒப்பிட்டு பேசுவது வேதனையாக உள்ளது. ஒரு நாள் வெயிலில் நின்று வேலை செய்து பாருங்கள், அப்போது விவசாயிகளின் க‌‌ஷ்டம் தெரியும். விவசாயத்தை பற்றி அவருக்கு என்ன தெரியும். க‌‌ஷ்டமே தெரியாமல் வளர்ந்தவருக்கு விவசாயி அருமை பற்றி தெரியுமா? அவர் ரவுடி ராஜ்ஜியம் நடத்தியதால் விவசாயியை ரவுடியுடன் ஒப்பிட்டு பேசி வருகிறார். விவசாயிகள் மனம் புண்படும்படியாக இனிமேல் பேச வேண்டாம் என விவசாயிகள் சார்பில் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.

விவசாயிகளுக்கு வருமானத்தை இரட்டிப்பாக்க விவசாயிகள் விளைவித்த பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்யும். இடைத்தரகர்கள் இன்றி பொருட்களை விற்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பாக ரே‌‌ஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2,500 வழங்குகிறது. ஆனால் அதை நிறுத்துவதற்கு மு.க.ஸ்டாலின் முயற்சி செய்தார். ஆனால் அதையும் முறியடித்து கொடுத்து வருகிறோம். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிறது. அதில் தி.மு.க.வை வீழ்த்தி அ.தி.மு.க. அரசு மீண்டும் தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story