மாவட்ட செய்திகள்

முதல்-அமைச்சருக்கு உறுதுணையாக இருப்பதால் என்னை குறிவைத்து விமர்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் மீது எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு + "||" + SB Velumani accuses MK Stalin of targeting me for supporting the First Minister

முதல்-அமைச்சருக்கு உறுதுணையாக இருப்பதால் என்னை குறிவைத்து விமர்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் மீது எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

முதல்-அமைச்சருக்கு உறுதுணையாக இருப்பதால் என்னை குறிவைத்து விமர்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் மீது எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
கட்சி-ஆட்சி நிலைக்க முதல்-அமைச்சருக்கு உறுதுணையாக இருப்பதால் என்னை குறிவைத்து மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார் என்று எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை,

கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்து கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசியதாவது:-


தமிழக அரசு, முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து அவதூறு பரப்பியும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிய மு.க.ஸ்டாலினை கண்டித்தும், மக்கள் கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வை கண்டித்தும் இந்த பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மாவட்ட தலைவர் உள்பட பல்வேறு உள்ளாட்சி பதவிகளை அ.தி.மு.க. தான் அதிக அளவில் கைப்பற்றியது. கோவை மாவட்டத்தில் எங்குமே வராத மு.க.ஸ்டாலின் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் ஊராட்சியில் கூட்டம் நடத்தினார். ஆனால் அந்த கூட்டத்தில் தேவராயபுரம் ஊர்க்காரர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது இங்கு உள்ளவர்கள் எல்லோருக்கும் தெரியும். 6 மாவட்ட செயலாளர்களை வைத்து அவர் கூட்டம் நடத்தி உள்ளார். இதிலிருந்து தி.மு.க.வுக்கு இந்த பகுதியில் தகுதி எப்படி இருக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு இல்லை.

பொய் பிரசாரம்

மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. பொய், புரட்டு, ஏதாவது பேசி முதல்-அமைச்சர் நாற்காலியை பிடிக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மீண்டும் கட்சிக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. நாங்கள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தோம். ஓ.பன்னீர் செல்வம் ஒரு பக்கம் இருந்தார். ஜெயலலிதா இறந்த பின்னர் இந்த ஆட்சியை எப்படியாவது கலைத்து விடுவதற்கு மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார்.

ஆனால் இந்த ஆட்சியையும், கட்சியையும் நிலை நிறுத்துவதற்கு நானும் அமைச்சர் தங்கமணியும் உறுதுணையாக இருந்தோம். அதற்கு பின்னால் ஒ.பன்னீர் செல்வத்திடம் பேசி எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் இணைப்புக்கு நாங்கள் முக்கிய காரணமாக இருந்தோம்.

அவர்கள் 2 பேரும் இணைந்தாலும் என்னுடைய பங்கு முக்கியமாக இருந்தது. இரட்டை இலை சின்னத்தையும் முடக்க பார்த்தனர். அதற்காக சட்டத்துறை அமைச்சர் உள்பட பலரும் சிறப்பாக பணியாற்றி சின்னத்தை மீட்டோம்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலின் பொய் பேசியதால் மக்கள் அதை நம்பினார்கள். 5 பவுன் நகை இலவசம், மாதம் 6 ஆயிரம் ரூபாய் குடும்பத்துக்கு வழங்கப்படும். கல்வி கடன் ரத்து, விவசாயிகள் எல்லா வங்கியிலும் வாங்கிய கடன்கள் ரத்து என்பன போன்ற பொய்யான வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றார். இங்கு வெற்றி பெற்ற பொள்ளாச்சி தொகுதி சண்முகசுந்தரம் வெற்றி பெற்ற பிறகு அவரை யாராவது பார்த்தீர்களா? அ.தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், காலை முதல் இரவு வரை கிராமம் கிராமமாக சுற்றி மக்களுக்காக வேலை செய்து வருகிறோம்.

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து உங்களோடு பழகிய எனக்கு கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் சவால் விடுகிறார். நாம் கட்சி, முதல்-அமைச்சருக்கு விசுவாசமாக இருக்கிறோம். இந்த கட்சியும், ஆட்சியும் 100 ஆண்டுகள் இருக்கும் என்று ஜெயலலிதா கூறினார். எப்படியாவது இந்த ஆட்சியை கலைத்து குறுக்கு வழியில் முதல்-அமைச்சர் ஆகி விட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கனவு கண்டார். இதற்கு தடையாக இருந்த காரணத்தினால் என்னை குறி வைத்து மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார்.

பாலங்கள்-சாலைகள்

அவர் என் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருக்கிறார். நீங்கள் துணை முதல்-அமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தீர்கள். நீங்கள் வாக்களித்த மக்களுக்கு அதிலும் குறிப்பாக கோவை மாவட்ட மக்களுக்கு என்ன செய்தீர்கள்? கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு கோவை மாவட்டத்திற்கு 50 ஆண்டுகாலங்களில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் நாங்கள் கொடுத்துள்ளோம். கோவை மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் சாலைகள், பாலங்கள் அகலப்படுத்தி 80 சதவீதம் விபத்துக்களை குறைத்துள்ளோம். தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு 10 கிலோமீட்டர் தூரத்துக்கு மிக நீளமான பாலம் கோவை-அவினாசி சாலையில் அமைய உள்ளது. தொண்டாமுத்தூர் தொகுதியில் எல்லா பாலங்களையும் கட்டி முடித்து விட்டோம்.

கோவை மாவட்டத்தில் 5 கல்லூரிகளை கொண்டு வந்துள்ளோம். 70 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கான நிதி ஒதுக்கி பணிகள் 50 சதவீதம் முடிந்துள்ளது. கோவை விமான நிலைய விரிவாக்க 20 ஆண்டு கால பிரச்சினையும் விரைவில் முடிய உள்ளது. கிராமந்தோறும் பாலங்கள், சாலைகள் மற்றும் இந்த தொகுதிக்கு மட்டும் ரூ.130 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் பெற்றுத் தந்துள்ளோம். இன்னும் 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை வராது. மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது என்ன நடந்தது? நான் உள்ளாட்சித் துறை அமைச்சரான பின்னர் என்ன நடந்தது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், இந்தியாவிலேயே கோவையில் தான் அதிக வீடுகள் கட்டும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

எதுவும் தெரியவில்லை

ஓட்டு போடும் மக்களை ஏமாற்றாமல் மனசாட்சிப்படி வேலை செய்யும் கட்சி அ.தி.மு.க. நாங்கள் தொகுதிக்கு இவ்வளவு செய்திருக்கிறோம். எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று நெஞ்சை நிமிர்த்து ஓட்டு கேட்போம்.

உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு எதுவுமே தெரியவில்லை.

மீனவர் பிரச்சினை, காவிரி, முல்லை பெரியாறு, கச்சத்தீவு போன்ற பிரச்சினைகளை நீங்கள் நினைத்திருந்தால் தீர்த்திருக்கலாம். கருணாநிதி சொன்னால் மன்மோகன்சிங்கும், சோனியாவும் கேட்டார்கள் அல்லவா? அன்றும் ஒன்றும் செய்யாமல் இன்று வந்து முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். தி.மு.க.வினர் என்னென்ன அராஜகங்கள் செய்வார்கள் என்று மக்களுக்கு தெரியும்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி எல்லோருக்கும் தெரியும். அவர் நடத்தும் கிராம சபை கூட்டங்களில் வாங்கும் மனுக்களை என்ன செய்கிறார். முதல்-அமைச்சர், அமைச்சர்களிடம் கொடுக்க வேண்டும். ஆனால் அவை அனைத்தையும் குப்பை தொட்டியில் தான் போடுகிறார். எனவே பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்ற பார்க்கிறார்.

மக்களுக்கு பாதுகாப்பு

மக்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கொடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். ஆனால் அதையும் நிறுத்தப் பார்க்கிறார்கள். தி.மு.க.வினர் என்ன தில்லு முல்லு செய்து நிறுத்த பார்த்தாலும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். முதல்-அமைச்சருக்கு நல்ல பெயர் கிடைத்துவிடக்கூடாது என்று தி.மு.க.வினர் நினைக்கிறார்கள். அது நடக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், வி.பி.கந்தசாமி, ஓ.கே.சின்னராஜ், கஸ்தூரி வாசு, அமைப்பு செயலாளர்கள் ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கோகுலம் எம்.தங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் என்.கே.செல்வதுரை, பொருளாளர் என்.எஸ்.கருப்பசாமி, இணை செயலாளர் எஸ்.மணிமேகலை, ஒன்றிய குழுதலைவர் மதுமதி விஜயகுமார், ஒன்றிய செயலாளர் டி.பி.வேலுசாமி, மாதம்பட்டி ஒன்றிய செயலாளர் டி.சக்திவேல், பேரூர் ஒன்றிய செயலாளர் ராஜா என்கிற ராமமூர்த்தி, பேரவை இணை செயலாளர் ஜி.கே.விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சந்திரசேகர், பகுதி செயலாளர்கள் வி.குலசேகரன், டி.மதன கோபால், பி.கே.சீனிவாசன், லாலி ரோடு ஆர்.விஜய் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. முஸ்லிம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
முஸ்லிம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
2. ராசிபுரம், பரமத்திவேலூர் பகுதிகளில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ராசிபுரம், பரமத்திவேலூர் பகுதிகளில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய- மாநில அரசுகளை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையத்தினர் (சி.ஐ.டி.யு.) பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்போவதாக முன்கூட்டியே அறிவித்திருந்தனர்.
4. ஏன் குறைவாக கொடுக்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்: மக்களுக்கு ரூ.2,500 கொடுப்பதை தடுக்கவில்லை எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்
‘‘மக்களுக்கு ரூ.2,500 கொடுப்பதை தடுக்கவில்லை. ஏன் குறைவாக கொடுக்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்’’ என்று எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
5. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் குழித்துறை மறை மாவட்டம் சார்பில் தக்கலையில் நடந்தது
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி குழித்துறை மறைமாவட்டம் சார்பில் தக்கலையில் கல்குளம் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.