நகைக்கடை பெண் உரிமையாளரை தாக்கி தங்க நாணயங்கள் கொள்ளை வாலிபருக்கு வலைவீச்சு


நகைக்கடை பெண் உரிமையாளரை தாக்கி தங்க நாணயங்கள் கொள்ளை வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Jan 2021 9:01 AM IST (Updated: 4 Jan 2021 9:01 AM IST)
t-max-icont-min-icon

காரமடையில் நகைக்கடை பெண் உரிமையாளரை தாக்கி 48 கிராம் தங்க நாணயங்களை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காரமடை,

கோவை மாவட்டம் காரமடை மேற்கு ரத வீதியில் சாந்தாமணி (வயது 40), என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. கடந்த 1-ந் தேதி மாலை 5.30 மணிக்கு இவரது நகைக்கடைக்கு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். பின்னர் அவர் ரூ.500 கொடுத்து நவரத்தின கல் ஒன்றை வாங்கினார்.

தொடர்ந்து அந்த வாலிபர் கடையில் உள்ள தங்க நாணயங்களை காண்பிக்கும்படி கடையின் உரிமையாளர் சாந்தாமணியிடம் கேட்டார். இதையடுத்து அவர் தங்க நாணயங்களை எடுத்து காண்பித்துக்கொண்டிருந்தார்.

உரிமையாளரை தாக்கி கொள்ளை

அப்போது அந்த வாலிபர் நகைக்கடை உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பிவிட்டு 8 கிராம் எடையுள்ள தலா 6 தங்க நாணயங்களை திருடி தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்ததாக தெரிகிறது.

இதனை கடையின் உரிமையாளர் சாந்தாமணி பார்த்துவிட்டார். உடனே சுதாரித்துக்கொண்ட அவர் கடைக்கு வெளியே வந்து அக்கம் பக்கத்தினரை அழைக்க முயன்றார். ஆனால் அந்த வாலிபர் சாந்தாமணியை தாக்கி கீழே தள்ளிவிட்டு, தங்க நாணயங்களை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி மறைந்துவிட்டார்.

வாலிபருக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து சாந்தாமணி, காரமடை போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளையும் பதிவு செய்து கொண்டனர்.

மேலும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த வாலிபர் கடைக்குள் வருவதும், தங்க நாணயங்களை கொள்ளையடித்து செல்வதும் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை வைத்து அந்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காரமடையில் நகைக்கடை பெண் உரிமையாளரை தாக்கிவிட்டு 48 கிராம் தங்க நாணயங்களை வாலிபர் ஒருவர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story