பாதாமியில் நடந்த பாராட்டு விழாவில் பரபரப்பு: கிராம பஞ்சாயத்து உறுப்பினரை மேடையில் இருந்து இறக்கிவிட்ட சித்தராமையா
பாதாமியில் நடந்த பாராட்டு விழாவின் போது கிராம பஞ்சாயத்து உறுப்பினரை, சித்தராமையா மேடையில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டதால் பரபரப்பு உண்டானது.
பாகல்கோட்டை,
வடகர்நாடக மாவட்டமான பாகல்கோட்டையில் கடந்த ஆண்டு (2020) கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் பாதாமி தாலுகாவில் உள்ள பல கிராமங்களை வெள்ளம், மழைநீர் சூழ்ந்தது. இதன்காரணமாக ஏராளமான வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையிலும் வீடுகள் உள்ளன.
இதுபற்றி அறிந்த பாதாமி தொகுதி எம்.எல்.ஏ. சித்தராமையா, சேதம் அடைந்த வீடுகளை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். ஆனால் வீடுகளை சரிசெய்து கொடுக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு பாதாமி டவுனில் நேற்று பாராட்டு விழா நடந்தது. இதில் சித்தராமையாவும் கலந்து கொண்டார். இந்த நிலையில் பாதாமி தாலுகா கத்தாலி கிராம பஞ்சாயத்து உறுப்பினரான சங்கண்ணா என்பவர் மேடையில் பேசும்போது, எங்கள் கிராமத்தில் மழையால் சேதம் அடைந்த வீடுகளை சரிசெய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சித்தராமையா கூறியும் அவரது பேச்சை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.
சித்தராமையா எங்கள் கிராமத்திற்கு வந்து சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட வேண்டும் என்று கூறினார். அப்போது மேடையில் இருந்த சித்தராமையா திடீரென கடும் கோபம் அடைந்தார். பின்னர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் சங்கண்ணாவை அவர் மேடையில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறகிகி விட்டார். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதுதொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
Related Tags :
Next Story