மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி வேளாண்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி வேளாண்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 5 Jan 2021 11:40 AM IST (Updated: 5 Jan 2021 11:40 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் வேளாண்மை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. இதன் காரணமாகவும் கடந்த மாதம் உருவாகிய புயல்கள் காரணமாகவும் பெய்த மழையால் கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விவசாய நிலங்களுக்குள் மழைநீர் புகுந்ததால் பயிர்கள் அழுகி சேதமானது.

குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததுடன், விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டன.

விருத்தாசலம் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த உளுந்து உள்ளிட்ட பயிர்கள் அழுகி சேதமானது. மேலும் பெரும்பாலான நிலங்களில் நோய்தாக்கி உளுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகளவு செலவு செய்தும் செலவு செய்த தொகையை கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள், அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த விருத்தாசலம் பகுதி விவசாயிகள் ஜெயகுரு தலைமையில் தங்களது நிலங்களில் பாதிக்கப்பட்ட உளுந்து, பச்சைப்பயிறு உள்ளிட்ட பயிர்களை பிடுங்கி எடுத்துக்கொண்டு விருத்தாசலம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் நிலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் விவசாயிகள், வேளாண்மைத் துறை அதிகாரிகளை சந்தித்து விவசாயிகளுக்கு உரிய கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும். காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை ஏற்ற விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story