திருமானூர் அருகே, சொத்து பிரச்சினையில் பயங்கரம்: தாயை கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய மகன் கைது


திருமானூர் அருகே, சொத்து பிரச்சினையில் பயங்கரம்: தாயை கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய மகன் கைது
x
தினத்தந்தி 6 Jan 2021 4:38 AM IST (Updated: 6 Jan 2021 4:38 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர் அருகே சொத்து பிரச்சினையில் தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சன்னாவூர் கிராமத்தை சேர்ந்தவர் வைரம். இவருடைய மனைவி தனம்(வயது 70), மகன் உதயகுமார்(47). வைரம் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இதனால் தனம், உதயகுமாருடன் வசித்து வந்தார். உதயகுமார் விவசாயம் செய்து வருகிறார். சொத்து பங்கீடு தொடர்பாக தனத்துக்கும், உதயகுமாருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி தனம் விஷம் குடித்து இறந்துவிட்டதாக வெங்கனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தனத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தற்கொலை என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும் தனத்தின் சாவில் போலீசாருக்கு சந்தேகம் இருந்து வந்தது.

கைது

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்து நெரிக்கப்பட்டு தனம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், உதயகுமாரை அழைத்து விசாரணை நடத்தினர். இதில், அவர் தனத்தை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, வாயில் விஷத்தை ஊற்றி, விஷம் குடித்து இறந்து விட்டார் என்று நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, உதயகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

Next Story