தொடர் மழை காரணமாக ஏரிகள் கிடுகிடுவென நிரம்புகின்றன: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்


தொடர் மழை காரணமாக ஏரிகள் கிடுகிடுவென நிரம்புகின்றன: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 6 Jan 2021 8:10 AM IST (Updated: 6 Jan 2021 8:10 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரிகள் கிடுகிடுவென நிரம்புகின்றன. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

பூந்தமல்லி,

கடந்த ஆண்டு பொழிந்த பருவமழை மற்றும் அடுத்தடுத்து உருவான 2 புயல்களின் தாக்கத்தினால் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. கடந்த நவம்பர் மாதம் 25-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்து, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்துவைத்தார். டிசம்பர் 30-ந்தேதி உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்ட நிலையில், பின்னர் 2-வது முறையாக டிசம்பர் 3-ந்தேதி உபரிநீர் திறந்து விடப்பட்டு 10-ந்தேதி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் செம்பரம்பாக்கம் ஏரியின் முக்கிய நீர் ஆதாரமான ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம் ஆகிய ஏரிகள் ஏற்கனவே நிரம்பி விட்டதால், நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மெல்ல, மெல்ல உயர்ந்தது. தற்போது ஏரியின் நீர்மட்டம் உயரம் 23.05 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3,364 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 500 கனஅடியாக உள்ளது.

தண்ணீர் திறப்பு

சென்னை குடிநீருக்காக 127 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. திடீரென பெய்துவரும் மழையால், ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில், மதியம் 2 மணியளவில் முதல் கட்டமாக 1,000 கன அடி நீர் அணையின் 5 கண் மதகில் இருந்து 3 மற்றும் 4 செட்டர்கள் வழியாக வெளியேற்றப்பட்டது. பின்னர் வெளியேற்றப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் மதகை ஒட்டி உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

இதன் காரணமாக குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் உபரி நீர் அதிகளவில் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக ஏரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏரி நிரம்பினால் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தான் உபரி நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 1986-ம் ஆண்டு ஜனவரி மாதம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு 35 வருடத்திற்கு பின் ஜனவரியில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது நீர் திறக்கப்பட்டுள்ளது.

புழல் ஏரி நிரம்புகிறது

அதே போல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமான ஒன்றாக புழல் ஏரி விளங்குகிறது. இதன் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொண்டதாகும். இந்தநிலையில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் திடீரென கனமழை பெய்ததால், இதனால் 3,238 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால், புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலை உருவானது.

இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித் துறையினரும் மாவட்ட நிர்வாகமும் முடிவு செய்ததையடுத்து, நேற்று பகல் 1 மணி அளவில் 2 ஷெட்டர்கள் வழியாக வினாடிக்கு உபரி நீராக 1,500 கன அடி வீதம் திறக்கப்படுகிறது. தொடர்ந்து ஏரிக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

திறக்கப்பட்ட உபரி நீர் செங்குன்றம், சாமியார்மடம், வடகரை, வடபெரும்பாக்கம், கொசப்பூர், சடயங்குப்பம் வழியாக எண்ணூர் கடலுக்கு சென்றடைந்தது.

உபரிநீர் திறந்து விடப்பட்டதையொட்டி, கால்வாயை ஒட்டி உள்ள பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பூண்டி ஏரி 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி (3.23 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்டது. தற்போது இந்த ஏரியில் 3 ஆயிரத்து 135 மில்லியன் கன அடி (3.13 டி.எம்.சி.) உள்ளது. கிருஷ்ணா நீர் மற்றும் மழை நீர் சேர்ந்து 3 அயிரத்து 70 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மொத்தம் உள்ள 35 அடியில் 34.94 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. இதில் தற்போது 2 ஆயிரத்து 970 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதில் 500 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.

Next Story