கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் முககவசம் அணியாதவர்களை பஸ்களில் ஏற்றக்கூடாது


கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் முககவசம் அணியாதவர்களை பஸ்களில் ஏற்றக்கூடாது
x

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் முககவசம் அணியாதவர்களை பஸ்களில் ஏற்றக்கூடாது என்று பஸ் ஊழியர்களிடம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் தற்போது உருமாறிய கொரோனாவால் விழிப்புடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் பொது இடங்களுக்கு செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், முக கவசம் அணிந்து செல்லுமாறும் அறிவுறுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டத்திலும் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் பஸ்களில் மக்கள் முககவசம் அணியாமல் பயணிகள் பயணம் செய்வதாக தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவுக்கு புகார்கள் வந்தன.

ஏற்றக்கூடாது

இதையடுத்து கலெக்டர் இது குறித்து ஆய்வு செய்யுமாறு வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தஞ்சை வட்டார போக்குவரத்து அதிகாரி (பொறுப்பு) ஜெய்சங்கர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், குண்டுமணி மற்றும் அதிகாரிகள் நேற்று தஞ்சை புதிய பஸ் நிலையம் மற்றும் தற்காலிக பஸ் நிலையத்தில் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது அவர்கள், பஸ்களில் முக கவசம் அணியாத பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடாது. முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வற்புறுத்துங்கள் என்றனர். மேலும் அங்கிருந்த பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் முககவசங்களை வழங்கி முக கவசம் அணியாத பயணிகளுக்கு வழங்க அறிவுறுத்தினர்.

அபராதம் விதிப்பு

இனி பஸ்களில் முக கவசம் அணியாமல் பயணிகள் பயணம் செய்தால், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்து அபராதம் விதிப்பார்கள் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக தனியார் பஸ்களின் உரிமையாளர்கள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளை அழைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூட்டம் நடத்தி விழிப்புணர்வும் ஏற்படுத்தி உள்ளனர்.

Next Story