வருகிற 17-ந்தேதி 2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் தகவல்


வருகிற 17-ந்தேதி 2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Jan 2021 11:46 AM IST (Updated: 6 Jan 2021 11:46 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் வருகிற 17-ந்தேதி நடைபெறும் முகாம்களில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவது தொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர்சாகமூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

1,611 மையங்கள்

கடலூர் மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவ மனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடக்கிறது.

மாவட்ட எல்லை பகுதிகள், குடிசைப்பகுதிகள், பணி நிமித்தமாக இடம் பெயர்ந்த மக்கள் வாழும் பகுதிகளில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட 1,611 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட 2 லட்சத்து 44 ஆயிரத்து 714 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

6,444 பணியாளர்கள்

இந்த பணிகளில் சுகாதாரத்துறையுடன் பள்ளிக்கல்வித்துறை, ஊட்டச்சத்து துறை, சமூகநலத்துறை, வருவாய்த்துறை, இந்திய குழுந்தைகள் நல மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்று செயல்பட உள்ளன. முகாம் ஒன்றுக்கு 4 பேர் வீதம் பல்வேறு துறைகளை சேர்ந்த 6 ஆயிரத்து 444 பணியாளர்கள், 196 மேற்பார்வையாளர்கள், மாவட்ட அளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஒவ்வொரு முகாமிலும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு சமுக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மொத்தமாக பொது மக்கள் வராமல் தனித்தனியாக வந்து பயனடைய ஏற்பாடு செய்ய வேண்டும். சொட்டு மருந்து போடும் பணியாளாகள் குழந்தைகளை தொடாமல் கொரோனா வழிமுறைகளை கடைபிடித்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கவேண்டும்.

நடமாடும் குழுக்கள்

முகாம் நடைபெறும் நாளன்று ஏதேனும் காரணங்களுக்காக விடுபடும் குழந்தைகள் வருகிற 18 மற்றும் 19-ந்தேதிகளில் இப்பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பார்வையிட்டு போலியோ சொட்டு மருந்து வழங்குவார்கள். மக்கள் கூடும் இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அருண்சத்தியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, உலக சுகாதார நிறுவன நோய் தடுப்பு மருத்துவர் சாயிராபானு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி முதல்வர் மிஸ்ரா, மருத்துவ நலப்பணிகள் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் டாக்டர்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

Next Story