புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி தஞ்சையில் சி.ஐ.டி.யூ.வினர் சாலை மறியல்


புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி தஞ்சையில் சி.ஐ.டி.யூ.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Jan 2021 9:20 AM IST (Updated: 7 Jan 2021 9:20 AM IST)
t-max-icont-min-icon

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி தஞ்சையில் சி.ஐ.டி.யூ.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 20 பெண்கள் உள்பட 117 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

விவசாயிகளுக்கு விரோதமான புதிய வேளாண் சட்டங்கள், மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் நல சட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சி.ஐ.டி.யூ. சார்பில் நேற்றுகாலை தஞ்சை காந்திஜிசாலை இர்வீன்பாலம் அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது.

சிறிதுதூரம் சென்றவுடன் ஊர்வலமாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஊர்வலமாக சென்றவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கோவிந்தராஜூ, மாவட்ட துணைச் செயலாளர் அன்பு, முறைசாரா மாவட்ட செயலாளர் பேர்நீதிஆழ்வார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலை வாய்ப்பு

மறியல் போராட்டத்தில், ஏழை தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500, தலா 10 கிலோ அரிசி, கோதுமை ஆகியவற்றை கொரோனா நிவாரணமாக வழங்க வேண்டும். தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டை உடனடியாக கட்டி முடித்து வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் அனைவருக்கும் பி.எப்., இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்வதுடன் அடையாள அட்டை வழங்க வேண்டும். ஏற்றுக்கூலியாக மூட்டைக்கு ரூ.6 வழங்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமும், பொங்கல் கருணைத்தொகை ரூ.3 ஆயிரமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

117 பேர் கைது

பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட துணைத் தலைவர் ராஜாராமன், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட பொருளாளர் ராஜா உள்ளிட்ட 20 பெண்கள் உள்பட 117 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். மறியல் காரணமாக 15 நிமிடம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story