8 ஊராட்சி ஒன்றியங்களில், ரூ.433 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள்; துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, ஊரக பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பணிகளின் தற்போதைய நிலைமை குறித்து ஆய்வு நடத்தினார். ஊரக பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களிடம் மனுக்களை அவர் வாங்கினார்.
கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, "கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2016-17-ம் நிதியாண்டு முதல் நடப்பு நிதியாண்டு வரை மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.433 கோடியே 87 லட்சம் மதிப்பில், 5 ஆயிரத்து 647 வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்களுக்காகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது" என்றார்.
கூட்டத்தில் ஜக்கையன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story