ஆண்டிமடம் பகுதியில் பலத்த மழை: தரைப்பாலம் மூழ்கியது- ஏரிகளின் கரை உடைப்பு


ஆண்டிமடம் பகுதியில் பலத்த மழை: தரைப்பாலம் மூழ்கியது- ஏரிகளின் கரை உடைப்பு
x
தினத்தந்தி 8 Jan 2021 5:58 AM IST (Updated: 8 Jan 2021 5:58 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. ஏரிகளின் கரை உடைந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளாகினர்.

ஆண்டிமடம்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குளம், ஏரி போன்ற நீர்நிலைகள் நிறைந்து வடிகால் வழியாக மழைநீர் வடிந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக ஆண்டிமடம் அருகே கோவில் வாழ்க்கை- தர்மசமுத்திரம் கிராமங்களுக்கு இடயே உள்ள செங்கால் ஓடை தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி, பாலத்தின் மீது 4 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

தரைப்பாலம் வழியாக தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆண்டிமடம் - காடுவெட்டி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆண்டிமடம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெய்யும் மழைநீர் செங்கால் ஓடை வழியாக வீராணம் ஏரியை சென்றடைகிறது. இந்த ஓடையின் தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து துண்டிப்பு

இதேபோல் நேற்று முன்தினம் இரவு பெய்த தொடர் மழையால் ஆண்டிமடம் விளந்தை பெரிய ஏரி, அண்ணங்கார குப்பம் ஏரி, கூவத்தூர் ஏரி நிறைந்தது. இதில் அண்ணங்கார குப்பம் ஏரி கரையில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளநீர் வெளியேறி ஜெயங்கொண்டம்- ஸ்ரீமுஷ்ணம் சாலையில் சூழ்ந்ததால், அப்பகுதியில் முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அண்ணங்காரகுப்பம் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்து, வீட்டிற்குள்ளும் புகுந்ததால் அப்பகுதி மக்கள் தவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த ஆண்டிமடம் தாசில்தார் தேன்மொழி, வெள்ளநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தார். குடியிருப்பு பகுதியில் சூழ்ந்திருந்த வெள்ளநீர் வடிவதற்கான வழிவகை செய்யப்பட்டது.

ஆண்டிமடம்-சிலம்பூர் சாலையில் சிலுவைச்சேரி கிராமம் அருகே உள்ள ஏரியின் கரைைய உடைத்துக்கொண்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஏரியின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் அருகே சாலையில் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனால் ஆண்டிமடம் -சிலம்பூர் இடையே பஸ், சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

Next Story