எட்டி உதைத்தால் எங்கே போவாய் தெரியுமா? அதிகாரியை ஒருமையில் திட்டிய கர்நாடக சட்டத்துறை மந்திரி மாதுசாமி


கர்நாடக சட்டத்துறை மந்திரி மாதுசாமி
x
கர்நாடக சட்டத்துறை மந்திரி மாதுசாமி
தினத்தந்தி 8 Jan 2021 6:01 AM IST (Updated: 8 Jan 2021 6:01 AM IST)
t-max-icont-min-icon

துமகூருவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், எட்டி உதைத்தால் எங்கே போவாய் தெரியுமா? என்று அதிகாரியை ஒருமையில் மந்திரி மாதுசாமி திட்டினார். இதனால் அங்கு பரபரப்பை ஏற்பட்டது.

நடவடிக்கை எடுக்கவில்லை
துமகூரு மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் துமகூருவில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சட்டத்துறை மந்திரியும், துமகூரு மாவட்ட பொறுப்பு 
மந்திரியுமான மாதுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இதில் பேசிய மாதுசாமி கூறியதாவது:-

என்ஜினீயரிங் பிரிவில் பணிகள் நடைபெறவில்லை. இதனால் கடந்த 4-ந் தேதி என்ஜினீயர்களுக்கு நான், நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கும்படி உத்தரவிட்டேன். ஆயினும் எந்த பணிகளும் நடைபெறவில்லை. (குறிப்பிட்ட ஒரு அதிகாரியை பார்த்து) நீங்கள் ஏன் அந்த பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எட்டி உதைத்தால் எங்கே போவாய் தெரியுமா?. ராஸ்கல், கழுதை மேய்ப்பதற்கு இங்கு வந்து இருக்கிறீர்களா?.

பணி இடைநீக்கம்
இத்தகைய அதிகாரிகளை உடனே பணி இடைநீக்கம் செய்ய மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். துமகூரு மாவட்டத்தில் எந்த பணிகளும் சரியான முறையில் நடைபெறவில்லை. பெரும்பாலான துறைகள் நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அந்த நிதி அப்படியே உள்ளது. துமகூரு உதவி கோட்டத்தில் ரூ.296 கோடியில் திட்ட பணிகளை முடித்திருக்க வேண்டும். ஆனால் ரூ.86 லட்சம் மட்டுமே அதிகாரிகள் செலவு செய்துள்ளனர்.

இது சரியல்ல. அதிகாரிகளின் மெத்தனமான நடவடிக்கைகளால் மாவட்டத்தின் வளர்ச்சி பாதிக்கிறது. விருப்பம் இருந்தால் இங்கு பணியாற்றுங்கள். இல்லாவிட்டால் வேறு இடத்திற்கு போய்விடுங்கள்.

இவ்வாறு மந்திரி மாதுசாமி பேசினார்.

அந்த ஒரு குறிப்பிட்ட அதிகாரியை பார்த்து மாதுசாமி ஒருமையில் பேசி திட்டி தீர்த்தார். இது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story