டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல் - 30 பேர் கைது


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல் - 30 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2021 12:45 PM GMT (Updated: 8 Jan 2021 12:45 PM GMT)

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம், 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் ராஜா தலைமை தாங்கினார். ஆட்டோ டிரைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாநில குழு உறுப்பினர் கே.டி.ராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதையடுத்து டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், சிறையிலுள்ள விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும். இந்தியாவின் மூலதனமாக விளங்கும் விவசாயத்தை அழிக்கக்கூடாது என கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 30 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதுகுறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லியில் கொட்டும் பனியிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை அந்த போராட்டத்தில் ஈடுபட்ட 55-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்து உள்ளனர். ஆனால் அதன் பிறகும் மத்திய அரசு மவுனம் காத்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, விவசாயத்தை பாதிக்கக்கூடிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், என்றனர்.

Next Story