கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கிய 2 முதியவர்கள் கைது


கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கிய 2 முதியவர்கள் கைது
x
தினத்தந்தி 9 Jan 2021 1:48 AM GMT (Updated: 9 Jan 2021 1:48 AM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடைக்கு லாரியில் மதுபாட்டில்களை கொண்டு வந்ததால் ஆத்திரமடைந்து டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

டாஸ்மாக் கடை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ள ஆரம்பாக்கத்தில் தமிழக-ஆந்திர எல்லையோரம் செக்குமேடு என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி டாஸ்மாக் கடை ஒன்றை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம பொது மக்கள் நடத்திய 3 மணி நேர போராட்டத்தின் எதிரொலியாக டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய ஆரம்பாக்கம் போலீசார், அங்கு மதுக்கடை திறக்கப்படாது என போராட்டகாரர்களிடம் உறுதி அளித்தனர்.

இந்த நிலையில் ஏற்கனவே பிரச்சினையால் மூடப்பட்ட மேற்கண்ட அரசு மதுபானக்கடைக்கு நேற்று முன்தினம் ஒரு மினிலாரியில் மதுபாட்டில்களை டாஸ்மாக் மேற்பார்வையாளர் சீனிவாசன் (வயது 42) என்பவர் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

2 பேர் கைது
இதனையறிந்த காரூர் என்ற கிராமத்தை சேர்ந்த சிலர் சீனிவாசனிடம், ஏற்கனவே பிரச்சினை உள்ள இடத்தில் மீண்டும் மதுக்கடையை எப்படி திறக்கலாம்? என கேட்டு உள்ளனர். அதற்கு அவர் கடையை திறப்பதற்காக தான் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக கூறியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அவரை சிலர் தாக்கியது மட்டுமன்றி மினி லாரியின் கண்ணாடியையும் உடைத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனுசாமி (62), விநாயகம் (61) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story