பொள்ளாச்சி சம்பவத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் முதல்-அமைச்சர் உறுதியாக இருக்கிறார்; அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
பொள்ளாச்சி சம்பவத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
100 சதவீத இருக்கைகள்
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்க முதலில் அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து திரைப்படத்துறையினரின் கோரிக்கைைய ஏற்று, 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
எனினும் திரையரங்குகளிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளுக்கு அளித்த தளர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வார்.
பொள்ளாச்சி சம்பவம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நியாயமான விசாரணை நடத்தவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதே தமிழக அரசுதான். இதுதொடர்பான விசாரணையில் தமிழக அரசு குறுக்கீடு செய்யவில்லை. சட்டம் தனது கடமையை செய்கிறது.
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இந்த வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகர் உடனடியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
பெண் மீது தாக்குதல்
கோவையில் தி.மு.க.வினர் நடத்திய கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்ணை மு.க.ஸ்டாலின் வெளியேற்றுமாறு கூறினார். உடனே, அந்த பெண்ணை போலீசார் அழைத்து சென்றபோது தி.மு.க.வினர் தாக்கி உள்ளனர். இதுதான் பெண்களுக்கு தி.மு.க.வினர் அளிக்கும் பாதுகாப்பா?
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story