தோவாளை அருகே கோழிகளை விழுங்க வந்த மலைப்பாம்பை எஜமானுக்கு காட்டிக்கொடுத்த நாய்


தோவாளை அருகே கோழிகளை விழுங்க வந்த மலைப்பாம்பை எஜமானுக்கு காட்டிக்கொடுத்த நாய்
x
தினத்தந்தி 10 Jan 2021 11:01 AM IST (Updated: 10 Jan 2021 11:01 AM IST)
t-max-icont-min-icon

தோவாளை அருகே கோழிகளை விழுங்க வந்த மலைப்பாம்பை தொடர்ந்து நாய் குரைத்து எஜமானுக்கு காட்டிக்கொடுத்தது. இதனால் விபரீத சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டது.

ஆரல்வாய்மொழி,

தோவாளை அருகே திருமலைபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 55), கட்டிட தொழிலாளி. இவர் வீட்டில் பசுமாடு மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார்.

நேற்று இரவு வீட்டில் கதவை பூட்டி விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு கணேசனுக்கு சொந்தமான நாயின் குரைக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டது. இதனால் தூக்கத்தில் இருந்த கணேசன் வெளியே வந்து பார்த்தார்.

மலைப்பாம்பு பிடிபட்டது

அங்கு கோழிக்கூண்டுக்குள் செல்ல முயன்ற ஒரு மலைப்பாம்பை, உள்ளே செல்ல விடாமல் தொடர்ந்து குரைத்தபடி இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணேசன், உடனடியாக வனத்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தார்.

சிறிது நேரத்தில் வனக்காப்பாளர் கிருஷ்ணமூர்த்தியும், நாகர்கோவில் தீயணைப்பு துறையினரும் அங்கு வந்தனர். அதன் பிறகு தான் மலைப்பாம்பை தடுத்து நிறுத்திய நாய் விலகியது. பின்னர் வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து சாக்கு பையில் போட்டனர். பிடிபட்ட மலைப்பாம்பு 10 அடி நீளமுடையது என வனத்துறையினர் தெரிவித்தனர். கோழிகளை விழுங்க வந்த மலைப்பாம்பை தொடர்ந்து குரைத்த நாய், எஜமானருக்கு காட்டிக்கொடுத்ததால் விபரீத சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டது.

Next Story