தென்காசி- நெல்லையில் பரவலாக மழை; சாலையில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. சாலையில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.
அணைகள் நிரம்பின
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. அதைத் தொடர்ந்து 2 முறை புயலையொட்டி கனமழை பெய்ததால் அணை முழு கொள்ளளவை எட்டி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி, குண்டாறு உள்ளிட்ட அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அணை முழுவதும் நிரம்பியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பரவலாக மழை
இந்த நிலையில் பாபநாசம், மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம், குண்டாறு, ராமநதி, கடையம், ஆலங்குளம், கொண்டாநகரம் உள்ளிட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்தது.
பாபநாசம் அணையில் 23 மில்லிமீட்டர் மழையும், ராதாபுரத்தில் 22 மில்லிமீட்டர் மழையும், பாளையங்கோட்டையில் 6 மில்லி மீட்டர் மழையும், நெல்லை 5 மில்லி மீட்டர் மழையும், சேரன்மாதேவி, நாங்குநேரி பகுதியில் தலா 2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
நேற்று காலை முதல் மதியம் 2 மணி வரை நெல்லை மாநகர பகுதியில் வெயில் அடித்தது. மதியம் 2 மணிக்கு திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 2.30 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழை ½ மணி நேரம் நீடித்தது. பின்னர் மாலை 4 மணிக்கும் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. சாலைகள் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். இதைத்தொடர்ந்து நெல்லை மாநகர் முழுவதும் சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது. சில நேரங்களில் பலத்த மழையும், சில நேரங்களில் சாரல் மழையும் தூறியது.
Related Tags :
Next Story